வாழ்க வளமுடன்

Showing posts with label வாழ்க்கை மலர்கள். Show all posts

சின்ன வயதுக் குழந்தைகளுக்கு உடைகளைத் தைக்கும் போது அவர்களின் வளர்ச்சியை ஞாபகத்தில் கொண்டு தாராளமாகத் தைத்துக் கொள்ளுகிறோம். துணியின் உறுதி அதிகமாக இருந்தால் இந்தத் தாராளம் சற்று அதிகமாக இருக்கும். இதனால், சில உடைகள் தைக்கும் போது பொருத்தமில்லாமலும் தோன்றாலாம். எனினும், போகப்போக அதன் உபயோகம் நீண்ட காலத்திற்குப் பொருத்தமானதாகவே இருக்கும்.

இதுபோன்ற அறிஞர்கள் உலக மக்களுக்குத் தரும் அறநெறிப் போதனைகளும், நல்வாழ்விற்கேற்ற திட்டங்களும் அக்காலத்திற்குச் சிறிது பொருத்தமில்லாமலும், அவசியமற்றவை என எண்ணும்படியாகவும் இருக்கலாம்.

கடந்த கால அனுபவங்கள், எதிர்கால விளைவுகள், தற்காலச் சூழ்நிலைகள் என்ற மூன்றையும் இணைந்து யூகிக்கும் திறனான 'முக்கால ஞானம்' என்ற அகன்ற நோக்கில் அவர்கள் திட்டங்களும், போதனைகளும் உருவாவதால் குறுகிய நோக்கமுள்ள மயக்கவாதிகளும், பாமரர்களும் அக்கருத்துக்களில் அடங்கியிருக்கும் நன்மைகளை உடனே எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சிறந்த சிந்தனையாளர்களும், நீண்ட எதிர்காலமுமே அத்தகைய அறிஞர்கள் கருத்துக்களைத் தெளிவாக விளக்கம் செய்ய முடியும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றால் என்ன ஆகும் என்றால் நம்மைச் சுற்றி எத்தனை மக்கள் இருக்கிறார்களோ, நமக்குத் தொடர்புள்ள அவர்கள் உயிரோடு ஊடுருவி ஒரு நட்பை வளர்த்துக் கொள்ள முடியும். எத்தனை பேருடைய நட்பு நல்ல முறையிலே ஏற்பட்டுக் கொண்டிருக்குமோ, அந்த அளவுக்கு மனதிலே நிறைவு உண்டாகும். அதே போல் வெறுப்புணர்ச்சி கொள்கிறோம் என்றால், ஒவ்வொரு வெறுப்புணர்ச்சியும் ஒருவரைத் தள்ளிவிட்டுக் கொண்டேயிருக்கும். அவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவராக நமக்குத் தெரிந்தவர்களோ, நெருங்கியவர்களோ ஒதுங்கிக் கொண்டே இருப்பார்களானால், முகமலர்ச்சி ஏற்படவே ஏற்படாது.

ஆகையினால், எப்பொழுதுமே நட்பை விருத்தி செய்து கொள்ளதற்கு நம்முடைய செயலில், இவருக்கு என்ன நன்மை செய்ய முடியும், நமது ஆற்றலைக் கொண்டு, இன்முகம் காட்டி என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டே வரும்பொழுது, அதற்காக உங்களுடைய நன்மையை அல்லது இருப்பை அழித்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு செய்தாலே போதும். நாம் ஒருவருக்கு ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால், அதுவே நல்லபடியாக அமையும். அந்த முறையில் எதிர்பார்ப்பதைத் தவிர்க்கலாம். இரண்டாவதாக, நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைத் தேர்ந்தெடுத்து அப்படிச் செய்வதற்கு வேண்டிய ஆற்றலை என்னென்ன முறையில் வகுத்து, வளர்த்துக் கொள்ள முடியுமோ, அதை வளர்த்துக் கொள்ளும்போது நிறைசெல்வம் இருக்கிற மாதிரி நமது மனநிலை வளர்ந்து கொண்டேயிருக்கும்.



-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஒருவழியில் பார்த்தால் மனிதன் இறைவனைவிட ஒரு படி மேலானவன் என்று கொள்ளலாம். அவனிடம் இறைத்தன்மை எல்லாம் இருக்கின்றன (God is omnipotent). இறைவன் எல்லா ஆற்றலும் நிறைவாகப் பெற்றவன். அத்தன்மை மனிதனிடம் இருக்கின்றது (God is omniscient). இறைவன் எல்லாம் அறிந்தவன். அத்தன்மையும் மனிதனிடம் இருக்கின்றது. (God is omnipresent). இறைவன் எங்கும் இருப்பவன். மனிதனும் அந்நிலையை எய்த முடியும். ஆராய்ச்சியின் மூலமும், யோகத்தின் மூலமும் உள்ளது உள்ளபடியே தன்னுணர்வாக, அகக்காட்சியாகப் பெற்று விட்டால் மனிதன் இறைத்தன்மையை முழுமையாகப் பெறுகிறான்.

மனிதனிடம் கடவுள் எல்லாமே இருப்பதோடு கடவுளை அறிந்து கொள்ளும் பெருமையும் இருக்கிறது. இத்தகைய பெருமை அவனிடம் இருக்க அதனை மறந்து தன் உடல் அளவிலே எல்லை கட்டிக் கொண்டிருக்கிறான். இந்நிலையிலேயிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அவன் தன் உயிரைப் பற்றிய அறிவு பெற வேண்டும். உயிரின் தன்மை என்ன? அதன் மூலம் என்ன? பரம்பொருளே, அதன் எழுச்சி நிலையே உயிராக இருக்கிறது. இன்று இந்த உடலில் உயிர் இருந்தாலும் பரம்பொருளின் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து இருந்து கொண்டுள்ளது.

உடலுக்குள் இருக்கும் உயிர், உணர்ச்சியின் அனுபோகத்தில் உடல் வரைக்கும் எல்லை கட்டிக் கொண்டு இருந்தாலும் தன் முழுமையை உணர்ந்து கொண்டால் - தன் மூலத்தையும், வியாபகத்தையும் அறிந்து கொண்டால் எல்லாவற்றிலும் தன்னையே பார்க்கின்ற ஒரு தன்மை வந்து விடுகின்றது. சிறுமை, பெருமை, தன்முனைப்பு எல்லாம் நீங்கி விடுகின்றன. இந்த நிலையில் பிறரை மதிக்கவும், ஆதரிக்கவும், பரிவு காட்டவும், மேல்நிலைக்குக் கொணரவுமான பொறுப்புணர்ச்சியைப் பெறுகிறான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

                    மனத்தின் இயக்க நிலைகளை இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம். ஜீவகாந்தமானது உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களின் விரைவான சுழற்சியினால் எழும் அலைகளே. ஒரு உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களிலிருந்து இவ்வாறு வெளியாகும் அலைகள் அனைத்தும் உடலில் சுழன்று கொண்டே இருக்கின்றன.

பொதுவாக, எந்த ஆற்றல் சுழற்சி பெற்றாலும் திண்மை உடைய பகுதி மத்தியில் போய்ச் சேர்வதும், லேசான பகுதி புறத்தே நிற்பதும் துல்லியச் சமதளச் சீர்மை (Specific Gravity) தத்துவம் ஆகும். இந்த இயல்பின்படி, ஜீவகாந்தத்தின் பெரும்பகுதி தனது சுழலியக்கத்தினால் உடலின் மையப் பகுதிக்கு வந்து சேருகிறது. அங்கு இறுகி, குறுகி அழுத்தம் பெற்று ஜீவகாந்த நிலைக்களமாக அமைகிறது. இதனைக் கருமையம் என்றும், ஆன்மா என்றும் வழங்குகிறோம்.

மனிதன் எந்தச் செயல் செய்தாலும் உடலில் ஓடிக் கொண்டிருக்கும், ஏற்படும் தாக்கங்கள் அனைத்தும் கருமையத்தில் போய்ச் சேருகின்றன. இந்த நிகழ்ச்சியை வினைப்பதிவு என்று கூறுகிறோம். பதிவு என்றால் இங்கு எழுதி விளக்கக் கூடியதோ, அல்லது புலன்களுக்கு எட்டும்படியாக அடையாளம் கொடுக்கக் கூடியதோ அன்று.

கருமையத்தில் இறுகிக் குறுகி, நிலை பெற்றிருக்கும் ஜீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செயல் அல்லது அனுபோக அனுபவங்களுக்கும் ஏற்ப, தரமாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி மாற்றம் பெற்ற தன்மைகள் அதே மன அலைச் சுழல் மறுபடியும் வரும்போது, மூளையின் காந்த அலைகளால் விரித்துக் காட்டப்படுகிறது. அப்பொழுது உண்டாகும் அகக்காட்சியே எண்ணங்கள்.

இறைநிலைக்கும் மன நிலைக்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும் என்றால், அவற்றை உருவத்துக்கும், அதிலிருந்து தோன்றும் நிழலுக்கும் ஒப்பிடலாம். உருவத்தை விட்டு நிழல் பிரிவதே இல்லை. ஆனால், நிழலை எடுத்துக்காட்டவல்ல ஒளியானது உருவத்தின் மீது படும் கோணத்திற்கு ஏற்ப, நிழலானது அளவில் மாறுபடும். அது போன்று மனிதமனம் இறைநிலையை விடுத்து இயங்குவதே இல்லை.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

             "Perspicacity" என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் "நுண்மான் நுழைபுலன்" என்பதாகும். நுண்ணிய என்றால் கூர்மையான, மாண் என்றால் மாண்புடைய, அதாவது விரிந்த சிந்தனையால் உயர்ந்த ஒரு பெருந்தன்மை, நுழைபுலன் என்பது ஊடுருவியறியும் திறன் (Penetrative knowledge) இதுதான் நுண்மாண் நுழைபுலன் என்பதற்கான முழு விளக்கம். வள்ளுவரும் ஒரு குறளிலே இதனைக் குறிப்பிடுகின்றார்.


                         "நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
                          மண்மாண் புனைபாறை யற்று"


                                என்ற ஆழ்ந்தோர் கருத்துடைய நுண்ணறிவு நிலை நுண்மாண் நுழை புலம்" தற்காலச் சூழ்நிலைகளையும், எதிர்கால விளைவுகளையும் ஒருகிணைத்து நோக்கி ஒவ்வொரு செயலையும் இப்படிச் செய்யலாம் என்று சரியாகவும், விரைவாகவும் தேர்ந்தெடுக்கக் கூடிய ஓர் அறிவு இருக்கிறதே அதைத்தான் "நுண்மாண் நுழைபுலன்" Perspicacity என்று சொல்வார்கள்.

அந்த நுண்மாண் நுழைபுலன் என்பதிலே விரிந்த அறிவு உண்டாகிவிடுகின்றது. மூன்று காலத்தையும் இணைக்கிறது அறிவு - பழைய அனுபவம், தற்காலச் சூழ்நிலை, எதிர்கால விளைவுகள் என்ற அளவிலே அதே நேரத்திலே இயற்கையின் விதியான செயல்-விளைவுத் தத்துவமும் கருத்தில் உள்ளது.

மனிதனுடைய தன்மை, அவனுடைய தேவை - இவற்றை இணைத்துச் செயல்படுகிறபோது, சரியான முறையிலே, சரியான வழியிலே, குறுகிய நேரத்திலே, சலனமில்லாமல், குழப்பமில்லாமல் தேர்ந்தெடுக்கக் கூடிய மனப்பக்குவத்தைத் தான் நுண்மாண் நுழைபுலன் (Perspicacity) என்று சொல்லுகிறோம்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

by thirukumaran | Friday, July 9, 2010 | In by NO COMMENTS

தற்சோதனையின் அவசியம்


                       தற்சோதனை என்பது மனத் தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஐயுணர்வின் வயப்பட்டு ஆன்மாவானது உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிகிறது. விளைவறிந்து செயலாற்றும் பண்பு ஓங்கும் வரையில் ஆன்மாவின் செயல்களால் பெரும்பாலும் துன்பமே விளைகின்றது, துன்பமோ பொருந்தா உணர்வு. அறிவு உயர்ந்து விழிப்பு நிலை பெறும்வரையில் ஆன்மா பழக்கத்தின் வழியே தான் செயல்களை ஆற்ற முடியும். எனவே, துன்பங்கள் மேலும் மேலும் பெருகுகின்றன. இந்த நிலைமையிலிருந்து தன்னையே தான் மீட்டுக் கொள்ள நிச்சயமான ஒரு வழி "தற்சோதனை" தான்.

தன்னைப் பற்றி, தன் இருப்பு, இயக்க நிலைகளைப் பற்றி, தன்னிடமிருந்து எழும் எண்ணங்களைப் பற்றி, செயல்களைப் பற்றி சிந்தனை செய்து, நலம் தீது உணர்ந்து, தீமைகளைந்து, நல்லன பெருக்கிப் பயன் காணும் ஒரு உளப்பயிற்சியே தற்சோதனையாகும். இது மனிதன் அறிவை உயர்த்தி வாழ்வை வளப்படுத்தும் ஓர் நற்பயிற்சி.

சமுதாயத்திலே நீ ஒரு பொறுப்பை ஏற்றுத் தொழில் புரிவதால் உன்னை வளர்த்து வாழவைத்த சமுதாயத்திற்கு நீ கடனைத் தீர்க்கிறாய். குழந்தைகளை ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறப்படையச் செய்வதும் சமுதாயத்திற்கு ஆற்றும் ஒரு சிறந்த கடமை தான். ஒரு குழந்தையை நல்லவனாகக் கல்வியில் சிறந்தவனாக உருவாக்கினால் ஒரு நல்ல குடிமகனை உலகுக்கு அளித்து உதவுகிறாய் என்பது தான் பொருள். உன் வருவாயை விட்டுக் கடமைகளை மறந்து வெளியேறினால் நீ எங்கே போக முடியும்? அடுத்த வேளைக்குப் பசி வந்தால் நீ என்ன செய்யப் போகிறாய்? பிச்சை தானே எடுக்க வேண்டும். அது பிறர்க்கு சுமை அன்றோ?

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வினையும் பயனும்


                 நம் முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துச் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றைச் செய்யக் கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும், தடைவிதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்குப் பொறுத்தமாக இருந்திருக்கும். நாம் இன்னும் அதிகமாக, ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில், "இதைச் செய், அதைச் செய்யாதே" என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது "சொர்க்கம்", "நரகம்" என்ற இரண்டு கற்பனைகளே. நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்ல இடத்தைக் கொடுப்பான்; தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள். விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுவரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?

இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், "ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு" என்ற இயற்கையின் நியதியை (Law of Nature) மனிதன் உணர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட வேண்டும். "இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு நான் தயாரா? என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய செயலிலே விளைவாகத் தொக்கி நிற்கக் கூடிய ஒரு உண்மையை, இயற்கை அமைப்பை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம். செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும், உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால் ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இறங்கும்போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான், தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம். 'வினையும் பயனும்' என்ற முறையிலே ஒரு தெளிவான பொறுப்புணர்ச்சி ஏற்படுவது இன்று எல்லோருக்கும் அவசியம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஓர் உலகம்



                    மனித இனம் வாழ்வதற்கு ஒரே உலகம் தான் இருக்கிறது. மனிதனுக்குத் தேவையான நீரை வழங்குவதற்குக் கடல் ஒன்று தான் உள்ளது. எல்லோரும் மூச்சு விடுவதற்குரிய காற்றும் ஒன்று தான் உண்டு. உயிர்கட்கு எல்லா வகையிலும் ஆதாரமாக இருக்கக்கூடிய சூரியனும் ஒன்று தான். இந்த நான்கில் ஒன்றையுமே மனிதன் செய்தது இல்லை.

மேலும், உலக விரிவான மனித சமுதாயத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் அறிவின் திறமையாலும், உடல் உறுப்புகளின் செயல் திறமையினாலும் உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களின் மூலம் மனிதகுலம் மொத்தமும் வாழ்ந்து வருகிறது. இவ்வாறே ஒவ்வொருவருடைய தினசரி வாழ்க்கையும் அமைந்து உள்ளது.

மனிதன் பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந்தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது.

எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இறைவனுடைய எந்திரமாகவே இருக்கக்கூடிய மனிதனிடம்-இறைவனுடைய கருவியாகவே இருக்கக் கூடிய மனிதனிடம் - முழுமையாக ஆறாவது அறிவு வந்து விட்டதால், இறைவனோடேயே கலக்கக் கூடிய அளவுக்கு மனிதனிடம் ஆற்றல் இருப்பது தெரியவரும். அந்த ஆற்றலைக் கொஞ்சம் வளர்த்துக் கொண்டால் போதும். நீங்கள் இனிமேல் இறைவனிடம் போய் எதுவும் தனியாகக் கேட்க வேண்டியது இல்லை. உங்களுடைய மனத்தின் அடித்தளத்தில் இறைவனே அமர்ந்திருக்கின்றான். அதைத் தெரிந்து கொள்ளாதது தான் உங்களுடைய தவறு. அந்தத் தவறு தான் அவனை மறைத்துக் கொண்டு இருக்கிறது.

சும்மா ஒரு தட்டு தட்டிவிட்டால் போதும்; உங்கள் அறிவு பிரகாசிக்க ஆரம்பித்து விடும். அப்படித் தட்டிவிடும் வேலை தான், 'நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் என்ன இருக்கிறது? அதை எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு எப்படிப் பெருக்கிக் கொள்ள முடியும்?' என்ற ஊக்கம்.

ஒரு குடும்பமானாலும் சரி, தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது சமுதாயம் ஆனாலும் சரி, எல்லோருமே ஆக்கத்துறையில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க முடியும். இந்தத் தத்துவம் விஞ்ஞானத்திற்கு ஒத்தது. இந்த எனது விளக்கம் உளவியல் தத்துவத்திற்கும் சரி அல்லது வாழ்க்கைக்கும் சரி, எதற்கும் முரண்படாது. உலகத்திலே இதுவரைக்கும் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய எந்த மதத்திற்கும் அது முரண்பாடானது ஆகாது.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

         வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலவ வேண்டும். அதற்கு ஏமாற்றமில்லாமல் வாழ வேண்டும். ஏமாற்றம் என்பது துன்பமும், சோர்வும் அளிக்கின்ற ஒரு மனநிலை. அது தன்னாலும் வரலாம். பிறராலும் வரலாம். இயற்கையாலும் கூட எழலாம்.

1. பேராசை,
2. அறியாமை,
3. தப்புக் கணக்கு,
4. விழிப்பின்மை,
5. பகை,
6. இயற்கைச் சீற்றம்,

ஆகிய ஆறு வகையில் ஏமாற்றங்கள் வருகின்றன. ஏமாற்றத்தின் அளவுக்கேற்ப அதிர்ச்சியும், துன்பமும் விளையும். அவ்வப்போது ஈடுசெய்து விடக் கூடிய சிறு சிறு ஏமாற்றங்களும் உண்டு. நீண்ட நாட்களுக்குத் துன்பம் தொடரக் கூடிய ஏமாற்றங்களும் உண்டு. வாழ்நாள் முழுவதிலும் கூட ஈடு செய்துவிட முடியாத ஏமாற்றங்களும் உண்டு.

பொதுவாக எல்லோரும் தங்கள் வாழ்வில் காணும் துன்பங்களுக்கு இந்த ஏமாற்றமே பெரும்பாலும் காரணமாக இருப்பதால், ஏமாற்றத்தைத் தவிர்க்கக்கூடிய சிந்தனையும், அந்தச் சிந்தனை தந்த விளக்கத்தைச் செயலுக்குக் கொண்டு வருகின்ற அறிவு மேன்மையும் வேண்டும். விழிப்பின்மையால் அலட்சியம், அசிரத்தை, சோம்பல் இவற்றுக்கு இடம் கொடுத்தால் செயல்திறன் குன்றிவிடும். அம்மாதிரியான மனநிலையில் செயலாற்றி, அதன் காரணமாக வெற்றி தவறிப் போகும்போது கவலை வரும்.

சிந்தனையோடு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். நல்ல முடிவைச் செயலுக்குக் கொண்டு வரும் திறமும், துணிச்சலும் வேண்டும். இத்தகைய சிந்தனையும், அதனால் ஏற்படும் விழிப்புணர்வும்,வாழ்கை முறையும் மனிதனின் வாழ்வில் வெற்றியையும், அமைதியையும் தரும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

          ஒவ்வொரு மனிதனும் பிறந்திருக்கின்றான், அவன் அறிவிலே முன்னேறிவர வேண்டியது தான் பிறவியினுடைய நோக்கம்; இது தான் இயற்கையினுடைய இயல்பு, அது கெடக் கூடாது. அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்கின்ற போது "தனி மனிதன் காப்பு" (security) என்பது அங்கு தான் உண்டாகின்றது.

உலகம் முழுவதிலும், மேல் நாட்டிலே கூடப் பல இடங்களில் என்னிடம் கேட்பதுண்டு, சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்று. "தனிமனிதனுடைய சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் கேட்கின்றீர்கள்; சுதந்திரம் இருக்கின்றது; அந்தச் சுதந்திரத்தைக் காப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கின்ற போது, கட்டுப்பாட்டினால் தான் சுதந்திரம் உண்டாகும்.

பிறர் சுதந்திரத்தை அழித்து விடக் கூடாது என்ற ஒரு பேருணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வந்து அவனுடைய செயல்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளும்போது தான் சுதந்திரம் எல்லோருக்கும் கிட்டுமே தவிர, சுதந்திரம் என்பது தானாக விரும்பும் காரியத்தை எல்லாம் தங்குதடையின்றிச் செய்வதற்கு ஒரு வாய்ப்பு என்று வைத்துக் கொள்வது தவறான கருத்தாகும்" என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு.

ஆகவே, சுதந்திரம் என்பது உண்மையாக எல்லோருக்கும் வேண்டுமானால், பிறருடைய சுதந்திரத்தை நாம் காக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகளில் தான் எல்லோருடைய சுதந்திரமும் காக்கப்படும்; ஒவ்வொரு தனி மனிதனுடைய பாதுகாப்பும் அமையும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

         அன்பும் கருணையும், மகிழ்ச்சியும், நிறைவும் வேண்டுமானால், இறைநிலை உணர்வு எல்லோருக்கும் வரவேண்டும். சிறு குழந்தைகள் நிலையிலே இந்த உணர்வு வருவது எளிதன்று என்பதால் சிலை வணக்கம் போன்ற சில முறைகள் அவசியமே.

ஆனால், பருவம் வந்தபின் புறவழிபாட்டிலிருந்து அகவழிபாடு தொடங்க வேண்டும். அதற்குப் பிறகு எல்லோருக்கும் அகத்தவம் எனும் கருதவசாதனை அவசியம் வேண்டும். அப்போது தான், மனம் ஒரு சம நிலையிலே இருக்கவும், உயர் நிலையிலே அறிவை இயக்கவும் முடியும்.

இங்கே தான் மனம் அமைதி பெறும். எல்லையற்ற ஆற்றலுடைய பரம்பொருளே அறிவாக இருப்பதால் அது தனது முழுமையை நோக்கியே விரிவடைகிறது. அதனை எந்தப் பொருளிலும், எவ்வகையான புலன் இன்பத்திலும் எல்லை கட்டி நிறுத்திவிட முடியாது. போதும் என்ற நிறைவு நிலையைப் பெற முடியாது. பொருளில், இன்பத்தில் நிறுத்தினால் அவற்றில் நிலைக்காது விரைவு மீறும்.

அதன் முழுமை எல்லை இன்னதென்று தெரியாத போது அதில் இணைப்புக் கிடைக்காத போது எந்தப் பொருளில், இன்பத்தில் அறிவைப் பொருத்தினாலும் அதுவே இன்னும் வேண்டும், மேலும் வேண்டும் என்று விட்டு விட்டு விரிந்து பேராசையாக அலைந்து கொண்டேயிருக்கும்.

மேலும் பரநிலையுணர்வும், அதில் அடங்கி இணைந்து நிலை பெறும் பேறும் கிடைக்காத போது, அறிவு தான், தனது என்னும் தன் முனைப்பில் உணர்ச்சிவயமாகி, புலன்கள் மூலமே அளவு முறை கடந்து செயல்புரிந்து துன்பங்களையும், சிக்கல்களையும் பெருக்கிக் கொள்ளும். தனது மூலமும் முடிவுமாகவுள்ள இருப்பு நிலையை அறிவு உணர்ந்தால் தான் அதில் அடங்கி நிலைத்து, நிறைவும் அமைதியும் பெறும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

                 பருவமழை பொழிகிறது; ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது; வெள்ளம் அதிகமாக இருந்தால் விளைநிலங்களில் பரவிப் பயிர்களை அழித்து விடும். ஆற்றுவெள்ளம் கரைபுரண்டால் ஊர்களிலே பாய்ந்து வீடுகளை மூழ்கடித்துவிடும்; மக்கள், மாடுகள், ஆடுகள் இவற்றிற்கும் அழிவைத் தரும்.

அதே ஆற்றை ஒரு அணைக்கட்டு (Dam) கட்டி நீரைத் தேக்கிக் கால்வாய்களை அமைத்து நீர்போக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டால் என்ன வியத்தகு மாற்றம்! எவ்வளவு நன்மை விளைகிறது! ஆண்டு முழுவதும் வயலுக்குப் பாய்ச்சுவதற்கு நீர் கிடைக்கிறது, குளிக்கவும் அருந்தவும் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறது. ஆற்றுக்கால் பகுதியிலுள்ள ஊர்களெல்லாம் வளம் பெற்றுச் செல்வம் கொழிக்கிறது.

இவ்வாறே மனிதனுடைய ஆற்றல் எல்லையற்றது. இதனை வேறு எதனோடும் ஒப்பிட்டுக் கணித்து உவமை கூற முடியாது. மனிதனிடம் அடங்கியுள்ள ஆற்றல் அத்தகைய பெருமையுடையது; இயற்கையின் பெருநிதியாகும் அது. அதை உணர்ந்து கட்டுப்படுத்தித் தேக்கி முறையாகச் செலவிட வழி கண்டு விட்டால், வாழ்நாள் முழுவதும் உடல்நலம் காக்கலாம், மனவளம் பெருக்கலாம். வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சி, இன்பம், அமைதி இவற்றை அடையலாம்.

இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட மனிதனுடைய ஆற்றல் அவன் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் வளம் பெருகும் ஊற்றாக அமையும். மனிதனுடைய இத்தகைய பேராற்றலைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தித் திட்டமிட்ட முறையில் செயல்படுத்திப் பயன் காணவல்ல ஒரு உளப் பயிற்சியையே "தியானம்" என்று கூறுகிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இறை உறவு

by thirukumaran | Monday, June 28, 2010 | In by NO COMMENTS

                இறைவனை நோக்கித் தியானம் செய்தால், வேண்டினால், அவர் நமக்கு இன்னது இன்னது வேண்டும் என்று கேட்பதைக் கொடுப்பார் என்பதாக நாமே படித்தோ அல்லது பெரியவர்கள் சொல் மூலமாகக் கேட்டோ இறைவனை வழிபடுகிறோம். அங்கே உணர்வு தான்; மதிப்பு இல்லை என்று சொல்லவில்லை; அந்த மதிப்பு மாத்திரம் இருக்கிறது. ஏதோ கிடைக்க வேண்டும் என்ற ஆசை மிகுந்திருக்கிறது. உறவிலே அப்படி இல்லை; அங்கு முழுவதுமாகக் கலந்து நிற்கிறோம். எனக்கு அங்கே ஒன்று கிடைக்கும், இல்லை, நான் இங்கிருந்து ஒன்று கொடுப்பேன் என்பதையெல்லாம் மறந்து இரண்டும் ஒன்று கலந்த இடத்திலே ஏற்படுவது தான் உறவு. அந்த உறவை, அதாவது இறை-உறவை ஏற்படுத்திக் கொள்வது தான் ஜீவன் உய்வதற்கான வழி.

அடுத்து, இறை-உறைவை "ஏற்படுத்திக்" கொள்ள வேண்டுமா என ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும் பொழுது என்ன தெரியவருகிறது என்றால் அந்த உறவு தான் ஏற்கனவே இருக்கிறதே, ஏற்படுத்த வேண்டும் என்பதில்லையே! அதை அறிந்து, உணர்ந்து கொள்ளும் போது எப்படி நாம் அவனை நினைக்காமல் இருந்தாலும் கூட எனக்குள்ளாகவே அறிவாக, உயிராக, இல்லமாக, உள்ளமாக (இல்லம் என்றால் உடல், உள்ளம் என்றால் உயிர்) இருக்கக் கூடியவன் அவனே தான் என்ற ஒரு தெளிவு ஏற்பட்ட பிறகு அவன் வேறு, இவன் வேறு என்று நினைப்பதற்கில்லை.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

                       ஒருவரிடம் ஒருவாரம் எடுத்துக் கொண்டு அவரிடம் மட்டும் சினம் தவிர்த்தல் பயிற்சியை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். "அவருக்கும் நமக்கும் என்ன உறவு? எத்தகைய உறவு? அவர் நமக்காக, நம் நலனுக்காக எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்?" என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பலமுறை, பல நாட்கள் நமது மகிழ்ச்சிக்காக அவர் ஆற்றிய தொண்டினை உற்று நோக்கினால் இத்தகைய அன்பு உருவத்தின் மீது, அன்பு கொண்ட நண்பர்மீது, உறவினர்மீது நான் சினம் கொள்வது தகாது; எனவே, இன்று முதற்கொண்டு அவர்மீது சினம் கொள்ளமாட்டேன் என்ற எண்ணம் உண்டாகும். இந்த எண்ணத்தோடு அவரது உருவத்தை மனத்தில் நினைத்து இம்முடிவை எடுத்துக் கொள்வோம். இன்று முதற்கொண்டு ஏழு நாட்கள் இந்தப் பயிற்சிக்கு ஒதுக்கிக் கொண்டு காலையிலே எழுந்தவுடன் "இன்று இவறோடு தொடர்பு கொண்டு பேசப் போகிறேன். இன்னின்ன வேளையில் செயலில் ஈடுபடப் போகிறேன், அவர் இன்னது சொன்னால் எனக்குச் சினம் எழுவது இயல்பாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இன்று அவர் என்ன சொன்னாலும் சரி, சினம் எழாது காப்பேன், சினம் வருமேயானால், அந்த இடத்திலே விழிப்பு நிலை கொண்டு என்னைத் தடுத்துக் கொள்வோம், என்று உறுதி கொண்டு, அவர் என்ன சொல்வார் என்று தெரிந்து கொண்டு அதற்கும் நாமே அமைதியாகப் பதில் சொல்ல வேண்டும், அல்லது பதில் பேசாமல் இருக்க வேண்டும்" என ஒரு மானசீக நாடகமே தயார் செய்து கொள்ள வேண்டும். "மீண்டும் அந்த நாளிலே அவரோடு பல முறை சந்தித்துப் பேச, செயலாற்ற வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் விழிப்போடு இருந்து இவரோடு சினம் கொள்ளாது நாம் இந்த நாளைக் கழிக்க வேண்டும்" எனவும் பழகிக் கொள்ள வேண்டும்.

இடையிடையே அப்போதைக்கப்போது சங்கற்பமியற்றி மன வலிவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். தவங்களில் அவர்கள் உருவத்தை நன்றாக நிறுத்திக் கனிவோடு வாழ்த்த வேண்டும். சினத்திலிருந்து திருந்தவும் சங்கற்பம் செய்ய வேண்டும். இந்தச் சினமொழிப்புப் பயிற்சி நமது குடும்ப உறுப்பினர்களுக்கும் வெற்றியாக முடிய வேண்டும் என்றும் சங்கற்பம் செய்து கொள்ள வேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.

இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.

ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.

எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?

நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.

அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

குடும்ப வாழ்வில் பொறுப்பேற்றுள்ள கணவன்-மனைவி இருவரும் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், தம்பதிகள் போதைப் பொருள் உபயோகித்து உடலுறவு கொண்டாலும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் உருவாகிவரும் குழந்தையின் உறுப்புகள் அதன் விளைவாகத் தாக்கப் பெறும். செயல் விளைவு நீதி அடிப்படையில் பெற்றோர்களின் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் இவற்றால் கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகள் நலிவுறும்.

மேலும் கர்ப்ப காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனதில் துன்பமோ, அச்சமோ அளிக்கும்படி எவரும் நடந்து கொள்ளக் கூடாது. குழந்தை உருவாகும் போதே தாய்-தந்தை இருவரின் கருமையப் பதிவுகள் குழந்தைக்குச் சொந்தமாகிவிடும். அதோடு, கருப்பையில் குழந்தை வளரும் காலத்திலும், பிறந்தபின் அதனை வளர்க்கும் முறையில், ஏற்படும் விளைவுகளும் குழந்தையின் உடல் நலத்தையும், மனவளத்தையும் தக்கபடி அமைத்துக் கொடுக்கும்.

நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று கணவனும், மனைவியும் விரும்புவது இயல்பு. அதற்கேற்றவாறு அவர்கள் கடமையை ஆற்றாவிட்டால், எவ்வாறு நல்ல குழந்தையை அடைவது? ஒரு குழந்தையின் உடல் நலமும், மனவளமும் பெற்றோர்களுக்கு மட்டும் உரிமையானவையல்ல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினரே.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

காமதேனு : தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டிப் புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப் பெற்று ஆன்மா செயல்புரியும்போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும், துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படும். முதல் கட்டம் காமதேனு.

கற்பகம் : கற்பு+அகம் என்ற சொற்களின் இணைப்புத் தான் கற்பகம். இங்கு ஆன்மா உயிர் வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றும் தகுதி பெற்ற நிலை இச்சித்து. இச்சித்து, துய்த்துத் துய்த்துச் சலிப்பும் துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்துத் தன்னடக்கம் உண்டாகி உயிர்நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றும் தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன்தேவை, பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதிபெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும், ஒழுக்கமும் பெற்ற ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு+அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.

சிந்தாமணி : சிந்தை மணியான நிலை. அதாவது சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர்நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து உயிர் விரைவைச் சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய் முடிவாகத்தான் இயக்கமற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப் பொருளாகி விடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற்கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.

தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பும் அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலைதான் சிந்தாமணி. இதுதான் மனிதனின் முழுமைப்பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தத்துவங்களைப் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் நடைபெறக் கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அர்த்தம் புரிந்து விடும். இறைநிலையைத் தாத்தா என்றால், அதிலிருந்து முதலில் தோன்றிய விண் மகன். முதல் விண்ணிலிருந்து இரண்டாவதாகத் தோன்றிய நிழல்-விண்ணோ இறைவெளிக்குப் பேரன்.

பேரன் எங்கே போனாலும் தாத்தாவுடன் சேர்ந்து கொண்டான். நிழல் விண் இறைவெளியோடு கலந்துவிட்டது தான் காந்தம். அப்படியானால் தாத்தாவும், பேரனும் அதாவது இறைவெளியும், நிழல் விண்ணும் ஆடும் கூத்துத் தான் பிரபஞ்சம்.

இறைவெளியில் நிழல் விண்கரைந்த நிலை காந்தம். காந்தம் தான் அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாக, மனமாகப் பிரபஞ்சம் முழுவதிலும் எல்லாப் பொருளிலும் இருக்கிறது. இறைவெளி என்ற தாத்தாவும், நிழல் விண் என்ற பேரனும் ஆடுகிற கூத்துத் தானே இவையனைத்தும்!

இறைவெளி புலன்களுக்கு எட்டாது இருந்ததனால் அதை விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனால், எப்படித் தத்துவஞானிகள் கண்டுபிடித்தார்கள்? மனம் சுழல் விரைவு அதிகமாயிருக்கிறபோது அது அலை. அலைக்கு அடித்தளமாக இருப்பது இறைநிலை. இறைநிலையிலிருந்து அலை விலகி நிற்கிற மாதிரி இருக்கும். ஆனால், மன அலைச் சுழல் விரைவு குறையக் குறைய, இறையுணர்வும் இறையாற்றலும் அந்த மனத்திற்கு வலுவைத் தருகின்றன. அப்படியே அந்த இறைநிலையோடு நெருங்கியிருக்கிறபோது, மனம் இறைநிலையைத் தெரிந்து கொள்கிறது.

இறைநிலையிலிருந்து தானே எல்லாமே வந்தன? எல்லா இயக்கங்களும், பதிவுகளும் வான்காந்தத்தில் தான் இருக்கின்றன. அதோடு மனம் இணைகிறபோது அங்கிருக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் தெரிகின்றன. நேற்று நடந்த செயலை நினைத்தால் நினைவிற்கு வருகிறது போலத் தனக்குள்ளாகவே பிரபஞ்ச ரகசியங்கள் தெரியும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரைத் தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.

யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு, தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.

தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக் கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகின்றது.

இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி