வாழ்க வளமுடன்

இளம் வயதிலேயே என்னுள்ளத்தில் நான்கு வினாக்கள் எழுந்தன. அவற்றிற்கு விடை காண்பதில் எனது பிறவியின் நோக்கம் என்பது போன்ற உணர்வோடு சிந்தனைச் சுடரிலே என் வாழ்நாட்களைச் செலவிட்டேன். வெற்றி கிடைத்தது. முதல் வினாவாகிய "தெய்வம்" தெளிவாக உணரப் பெற்றேன். அது எல்லா பொருள்களிலும் எல்லா உயிர்களிடத்திலும் அறிவு மயமாக ஒளிவிட்டு கொண்டிருக்கும் உண்மை உணர்ந்து கொண்டேன். மூன்றாவது வினாவாகிய "அறிவு எது?" என்பதையும் ஆராய்ந்து அறிந்து கொண்டேன். உண்மையிலேயே விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் பொருட்கள் நிறவி வராமல் தேங்கியும் அவசிய மற்ற பொருட்கள் பெருக்கமும் அவசியமான பொருட்கள் மீது அலட்சியமும் ஏற்ப்பட்டுப் பொருள் வறுமை போன்ற ஒரு மயக்க நிலை உருவாகி நிலைத்து வருகிறது என உணர்ந்து கொண்டேன்.

                  இந்தத் தெய்வீக உணர்வின் அடிப்படையில் தான் கர்மயோகம் என்ற உலக சமயம் எனது உள்ளத்திலிருந்து உருவாகியது. அந்த விரிந்த அறிவின் நிலையிலே இப்போது உங்களோடு பேசுகிறேன். செயல்புரியும் தெய்வங்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். உங்கள் செயல்கள் மூலம் தான் மனிதனுக்கு, உலகுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். இறைவனே உங்கள் அனைவருக்கும் அறிவாக இருக்கிறான்;  உங்கள் உடல் உறுப்புகளிலே ஆற்றலாக இருக்கிறான். மக்கள் எல்லோருமே சாதனை புரியும் சித்தர்கள். அரூபமாகிய இறைவனைக் கேட்டுப் பெறுவது ஒன்றுமே இல்லை என்று அறிந்த நான், உருவ நிலையில் உள்ள தெய்வங்களாகிய உங்களையே நோக்கி உலகுக்கு நலமளிக்கும் வரம் கொடுக்கம்படி கேட்கிறேன். உருவத்தோடு, செயலாற்றி விளைவு பெறும் அறிவாற்றலோடு உள்ள நம்மிடையே உலகத்தையும் ஒப்புவித்து விட்டு, அரூப நிலையில் உள்ள இறைவன் ஏதுமற்றவனாகி நிற்கிறான். இனி அவனைக் கேட்பதில் பயனில்லை; அப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால் காலமும், முயற்சியுமே வீணாகும். எனவே, நான் மக்களை நோக்கியே கேட்கிறேன். நம் அனைவருக்கும் இன்றியமையாத தேவையை நாமே தக்கபடி செயலாற்றிப் பெற்றுக்கொள்வோம்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "மகரிஷி கேட்கும் வரம்"