வாழ்க வளமுடன்

இப்பொழுது ஒரு பத்து விதைகளைப் போட்டு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரே மண்; ஒரே தண்ணீர். ஆனால், அந்தப் பத்து விதைகளும் விதைகளிலே இருக்கக்கூடிய தன்மைக்குத் தக்கவாறு இந்த தண்ணீரையும் இந்த மண்ணிலேயிருந்து அவை எடுக்க வேண்டிய அணுக்களையும் எடுத்துக் கொண்டு, வேப்பம் விதையென்றால் வேப்பஞ்செடியே தான் முளைக்கும். கரும்பு என்றால் கரும்பு தான் வரும். மாங்காய் என்றால் மாங்காய் தான் வரும். 
 
அதுபோலவே நமது உடலும், உயிர்ச்சக்தியை ஈர்த்துக் கொண்டு சேமிக்கவும், செலவிடவும் செய்கிறது. வரவு, செலவு இரண்டுக்கும் மத்தியிலே இருப்பு (Stock) ஒன்று எப்போதும் இருக்கும். அந்த இருப்பு மிகவும் குறைவாகப் போய்விட்டால் சோர்வு வரும். நோய் கூட வரும். நாள் முழுவதும் நாம் ஏதாவது பணி செய்து கொண்டிருப்பதால், மாலை நேரமானால் அந்த இருப்பு (Stock) குறைந்திருக்கும். பொதுவாக, அந்த இருப்பை அதிகரிக்கச் செய்வதற்குத் தான் உறக்கம் வருகிறது. உறங்கும் போது என்ன நிலைமையென்றால் மன இயக்கம் இல்லை; உடலியக்கம் மாத்திரம் நடக்கிறது. இரண்டிலே ஒரு இயக்கம் தவிர்க்கப்படுவதால் உயிர்ச்சக்தி சேமிக்கப்படுகிறது. காலையிலே அந்தச் சேமிப்புச் சரியான இடத்துக்கு வருகிறபோது அதனுடைய திணிவு, அதாவது அழுத்தம் (Intensity) போதிய அளவு வந்து விட்டதானால், நரம்பு மண்டலத்திற்கு இயல்பான தொடர்பு (Automatic reconnection)  மீண்டும் வந்து விடுகிறது; நாம் கண்விழித்து எழுகிறோம். 
 
பெரியவன் அங்கே இருக்கிறான்; எங்கும் நிறைந்த ஒரு சக்தியாக இருந்து கொண்டு காலத்தாலே இணைப்பைத் துண்டித்து (disconnecting)  காலத்தாலே மீண்டும் இணைப்பு (reconnecting) ஏற்படுத்துகிறான். கூலி மட்டும் நாம் கொடுக்கிறதே இல்லை. இம்மாதிரி ஒரு சக்தி இப்படி இருந்து கொண்டு என் உடலிலே இத்தனை வேலையும் செய்து கொண்டே இருக்கிறது என்பதை நினைத்தாலே போதும். அதற்கப்புறம் அந்த நினைவுக்குள்ளாகவே ஓடி அவனே வந்து "நீயே தான் நானாக இருக்கிறேன்; நானே தான் நீயாக இருக்கிறாய்" என்று சொல்லுவான்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

1 Response to "உறக்கம்"

  1. gravatar மதுரை சரவணன் Says:

    thanks for sharing.