வாழ்க வளமுடன்

பேரியக்க மண்டலத்தின் மூலமான எல்லாம் வல்ல இறை நிலைக்கும், அதன் பரிணாமத்தின் உச்சகட்ட நிலையிலிருக்கும் மனித மனத்துக்கும் இணைப்பு இயக்க மையமாக உள்ளது மனிதனிடம் அமைந்துள்ள சீவகாந்தக் கருமையம். இது இயற்கையின் மூலதனக் கருவூலம். இதுவே, இயற்கையின் முத்திறமும் இணைந்து செயல்புரியும் தொழிற்சாலை.

         இங்கு விளையும் சிறப்புகள் அத்தனையும் வெளிக் கொண்டு வரும் வாயில் தான் மனித மூளை. வெளிக் கொண்டு வந்து பரவ விடும் செயல் வீரன் தான் நமது மனம். மனதைக் கொண்டு உருவாக்கும் எண்ணங்கள், உடல் கருவிகள் மற்றும் புலன்களைக் கொண்டு செய்யும் செயல்கள், இவையனைத்தையும் காந்த அலைகளாகச் சுருக்கிக் கொண்டு வந்து கருமையத்தில் சேர்த்து, இருப்பு வைப்பது இயற்கையெனும் பேராற்றலின் செயல்களே! மனித மனம் செயல் புரிகின்றது. இறைவனாகிய இயற்கை அத்தனையும் அலைவடிவில் இறுக்கிச் சுருக்கிப் பதிவு செய்து இருப்பு வைக்கிறது.

         மனித உருவில் மனம் விரும்பிச் செய்யும் செயல்களை மனம் விரும்பி இயக்கும் நரம்பு மண்டல ஆற்றல் (Central nervous system) என்றும், இயற்கையால் நடைபெறும் மனித மனத்தால் கட்டுப்படுத்த முடியாத செயல்களைத் தானியங்கி நரம்பு மண்டல ஆற்றல் (Autonomous nervous system) என்றும் வழங்குகிறோம்.

         இத்தகைய செயல்விளைவு வழுவாத நீதி மன்றத்தைக் கொண்ட கருமையம் என்னும் ஆட்சி மன்றத்தை அமைப்பாகக் கொண்ட மனிதன், விளைவு அறிந்த விழிப்புடன் செயல்புரிந்தால், அவன் வாழ்வில் துன்பமே தோன்றாது.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "இயற்கையின் கருவூலம்"