வாழ்க வளமுடன்

ஆதிநிலையில், இருப்புநிலையாக, சுத்தவெளியாக உள்ள முற்றறிவைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதே அறிவு தான் பரமாணுவாக மலர்ச்சி பெற்ற நிலையின் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்கிற இயக்க நியதியாக இருக்கிறது. பரமாணுக்களின் கூட்டு, இயக்க வேறுபாடுகள், அடர்வு நிலைக்கேற்ப, தன்மை, துல்லியம், ஒழுங்கு என்ற மூன்றும் பருப்பொருள்களில் வேறுபடுகின்றது. இருப்புநிலையாக, சுத்த வெளியாக இருக்கும் வரையில் அறிவானது எல்லையற்ற தன்மையினாலும், புலன் கருவிகளின்மையாலும் உணர்வற்ற தன்மையாக அசைவற்று இருக்கிறது. எனினும், அது அணு முதல் அண்டம் ஈறாக அனைத்துக்குள்ளும் ஊடுருவி இயங்கிக் கொண்டிருக்கிறது. உயிரினங்களில் புலன் கருவிகளின் எண்ணிக்கைக்கேற்ப அறிவானது உணர்தல் என்ற தன்மைபெற்று இயங்குகிறது. உணர்தலில் கூட மூன்று இயக்க நிலை உண்டு. அவை: 1] உணர்தல் 2] அதனாலேயே [அனுபவம்] இன்ப, துன்ப அனுபவமடைதல் 3] ஒன்றோடு ஒன்று, ஒரு இயக்கத்தோடு ஒன்று பிரித்துணர்தல், இவற்றை ஆங்கிலத்தில் Cognition, Experience, Discrimination என்று வழங்குகிறோம்.

         இதே அறிவு மனிதனின் ஆறாவது நிலையான சிந்தனை அறிவாற்றலாக, இயற்கையின் முழுமையை உணர்ந்து கொள்ளத் தகுந்த பேராற்றலாக, தன்மூலமும் முடிவும் அறிந்து, தான் யார் என்ற தன்னிலை விளக்கமடையும் சிறப்பாற்றலாக உயர்வு பெறுகிறது. அப்படி உயர்வு பெற்ற நிலையில், அறிவை அறிந்த விளக்கத்தில், உடலாக, உயிராக, உணர்வாக அவற்றின் முடிவில் பரமாக இருப்பவன் எவனோ, அவனே நான், "நான்" என்ப்படுபவனே "அவன்" என்ப்படுகிறான்; தெய்வம் என்ப்படுகிறான்; ஆதியெனப்படுகிறான்; பிரம்மம் எனப்படுகிறான். அவனை விடுத்துத் தனியே ஒரு நிகழ்ச்சியும் இல்லை. 'அவனே நான்', 'நானே அவன்' என்ற தெளிவே, ஆன்மாவின் நிலையும் அதன் இயல்பும் அறிந்த தத்துவ விளக்கமே, அறிவையறிந்து அறவழி பிறழாது வாழும் உயர் நெறிவே 'ஞானம்' என்றும் 'முழுமைப்பேறு' என்றும் வழங்கப்பெறுகின்றது.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "முற்றறிவு (Total Consciousness)"