வாழ்க வளமுடன்

ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்,  வளர்கிறான், வாழ்கிறான், முடிந்து விடுகிறான். மனித சமுதாயமோ தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கி, வளர்த்து, அறிவு ஊட்டி, தொழில் திறம் காட்டி, வாழ்விற்கு வேண்டிய பொருட்கள், வசதிகள் அனைத்தையும் அளித்துக் காத்து வாழவைக்கிறது சமுதாயம். எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு வாழ்வளிக்கும் சமுதாய நலனுக்கே தன் அறிவு, உடல் ஆற்றல்களைப் பயன்படுத்தி வாழ வேண்டும். இவ்வாறு தனி மனிதன் தன் கடமையுணர்ந்து வாழவேண்டுமென்ற தெளிவும், பொறுப்புணர்வும் கொண்டு வாழ ஏற்றது சமுதாயம் என்பதை சொசைட்டி' (Society) என்று வழங்குகிறோம். சொசைட்டியின் நலனை முன் வைத்து ஒவ்வொரு மனிதனும் வாழும் நெறி (Ism) தான் சோஷலிசம்.

         பொருட்களும், பாலுறவும் தான் மனிதனின் அடிப்படைத் தேவைகள். இவற்றைப் பிறர்க்கோ, தனக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடல் உணர்ச்சிக்கோ, துன்பம் எழாத அளவோடு, முறையோடு துய்க்கும் ஒழுக்கமும், பிறர்க்கு ஒத்தும் உதவியும் வாழும் ஈகையும் கடமையும் இணைந்த தொகுப்புக் கருத்து "அறம்" ஆகும். உடல், உயிர், அறிவு, மெய்ப்பொருள் என்ற நான்கு நிலைகளை உணர்ந்து கொள்ளும் அறிவின் முழுமைப்பேறு தான் வீடு பேறு அல்லது மெய் விளக்கமாகும். இறைநிலை விளக்கமும் இதுவே.

         மனிதன் இறைநிலையுணர்ந்து, அறவழி கண்டு, பொருட்களையும், பாலுறவையும் துய்த்து வாழ்ந்தால் தான் தனி மனிதனிடத்திலும் சமுதாயத்திலும் அமைதி நிலவும். இதனால் மெய்விளக்கம் பெறும் வழியை இறைவழிபாடாகவும், அறநெறியினை உயிர்வழிபாடாகவும் வைத்து வாழ்க்கை நெறியினை முன்னோர்களான பேரறிஞர்கள் வகுத்துக் காட்டியுள்ளனர்.இத்தகைய மனித வாழ்வின் நன்னெறியே "மதம்" என்ற பேரால் வழங்கப் பெறுகின்றது. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கும் தேவைகளாக மனிதனுக்கு மலர்ந்தன.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

1 Response to "சோஷலிசம்"

  1. gravatar navinkrrish Says:

    it is really good and true thought by maharishi. i thank u for publishing this as service.