வாழ்க வளமுடன்

கடவுளைப் பற்றி இதுவரை எல்லா மதங்களிலும் என்ன சொன்னார்கள்?  எங்கும் உள்ளவன் (Omnipresent) என்றார்கள். எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவி அணுவுக்குள்ளும் இயக்க சக்தியாக இருப்பவன். அவன் தான் எல்லாம் அறிந்தவன் (Omniscient) எல்லாம் வல்லவன் (Omnipotent) என்றார்கள். இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு அவரவர் மதத்தில் என்னென்ன சொல்லிக் கொடுக்கிறார்களோ அதற்கும் இந்தக் கடவுள் தன்மைக்கும் ஒத்துக் கொள்கிறதா என்று பாருங்கள்.

                எந்த இடத்தில் யார் சொல்வது ஒத்துக் கொள்கிறதோ அதுதான் சரி. ஆனாலும் அதை அப்படியே எடுத்துக் கொண்டால் போதாது. இன்றைக்கு உலகில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. இந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலமாக அந்தக் கடவுள் தன்மையானது இந்தப் பிரபஞ்சத்தை எந்த முறையிலே நடத்துகிறது என்பதையும், அதன் இயக்கம், நோக்கம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

                அது தெரியாமல் அப்படியே பழைய கருத்துக்களையே வைத்துக் கொண்டால், மீண்டும் மனித அறிவு முன்னேற்றத்தில் முரண்படும். இப்பொழுது நம் உடலில் இந்த மாதிரி நடக்கிறது என்று சொன்னால் அது கடவுளால் நடக்கின்றது என்று சொல்லி விட்டால் போதாது. அந்தக் கடவுள் இந்த அணுவுக்குள்ளும் எம்மாதிரியாக இருந்து கொண்டு அதை நகர்த்துகிறான், சுற்றுகிறான், விளங்குகின்றான் அல்லது தோற்றப் பொருட்களைக் கூட்டுகின்றான், குறைக்கின்றான் என்பதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு அறிவு இக்காலத்தில் வளர வேண்டும்.
               
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "மதமும் விஞ்ஞானமும்"