வாழ்க வளமுடன்

எல்லாம்வல்ல மெய்ப்பொருள் [பிரம்மம்] எழுச்சி பெற்று உலகமாக, உயிர்களாகப் பரிணாமத்தினால் காட்சியாகிறது; அப்படிக் காட்சியாகும் பிரம்மத்தின் தன்மையான அறிவு வெளிப்படுகிறது. சுத்த வெளியாகிய மெய்ப்பொருள், அணுவாக இயங்கி, உலகமாக, உயிர்களாக, உயிரின் அலையான அறிவாக மாறும் வரை பிரம்மத்தின் வேறு தன்மை வெளிப்படுவதற்குச் சந்தர்ப்பம் கிடையாது.


பிரம்ம வேறு, அறிவு வேறா என்றால் வேறில்லை; இரண்டும் ஒன்று தான். அறிவை அறியும் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நாம் "எங்கு இருக்கிறோம், எப்படி இருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம்" என்பதை உணர்ந்து எப்போதும் விழிப்பு நிலை கொண்டு பிறருக்குத் துன்பம் தராத செயல்களையே எந்தக் கணமும் செய்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த விழிப்புநிலை தான் மெய்ஞ்ஞானம் ஆகும். (It is this State of constant awareness that is Wisdom). இந்த விழிப்புநிலை வந்து விட்டதேயானால் நாம் பிறருடைய தவறுகளைக் குறையாக எண்ண மாட்டோம். அப்படிக் குறையாகவே இருந்தாலும் அதைச் சுட்டிக்காட்டாமல், "அவர்களுடைய அறிவு இவ்வளவு, அதற்கேற்ப அவர்கள் செயல்களாற்றி வருகிறார்கள். அதற்கு நாம் எந்த விதத்தில் உதவ முடியும்" என்று பார்த்து முன்வருவோம்.

இந்த உயர்ந்த நிலை வந்து விட்டதேயானால் நம்முடைய செயல்களில் குற்றம் இருக்காது; நம்முடைய குற்றத்தைக் கண்டு நம்மைத் திருத்திக் கொண்டால் எப்போதும் நன்மையே செய்யும் தகைமை வந்துவிடும்.



-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "விழிப்புநிலையின் மேன்மை"