வாழ்க வளமுடன்

ஒடுங்கியும், விரிந்தும், பொருளாகவும், கருத்தாகவும், நன்மையாகவும், தீமையாகவும், இன்பமாகவும், துன்பமாகவும் இயங்கும் அறிவை உடைய மனிதன் எந்த அளவுக்கு, எவ்வளவு ஆழ்ந்து இயற்கையை, அதன் உண்மைகளை, இரகசியங்களை உணர்ந்து கொள்ளுகின்றானோ அந்த அளவிற்கே அவன் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், நிறைவும், அமைதியும் பெறுகிறான். இயற்கையை, அதன் விரிவான இயக்க ஆற்றல்களை, மனிதன் அறியாமலோ, அல்லது அறிந்தும் மறந்தோ, புலனளவில் குறுகி இயங்கும்போது அறிவு, காலம், தூரம், வேகம், பருமன் என்ற பரிணாமங்களால் கருத்தாகவும், வடிவமாகவும் மாற்றம் பெற்று உயர்வு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றது.

       இந்த நிலையில் அறிவுக்குத் தன்முனைப்பு (Ego) எனும் சிறுமை நிலை உண்டாகின்றது. இந்த சிறுமை நிலையில், மயக்கம், உணர்ச்சி, பயம், மிரட்சி, விளைவறியாச் செயல்கள், சிக்கல், கவலை இவை தோன்றிப் பெருகித் துன்பமடைகின்றது. இயற்கையோடு விரிந்தும், ஆழ்ந்தும், அதன் பெருமையோடு ஒன்றும்போது விளக்கம், விழிப்பு, அன்பு, கருணை, நிறைவு, அமைதி, மகிழ்ச்சி இவை பெற்று அமைதி பெறுகிறது. இங்கு 'தன்முனைப்பு' என்ற திரை விலகி இயற்கை என்ற அருட்பேராற்றலோடு இணைந்து மனிதன் பேரின்பமடைகிறான்.

       எனவே, இயற்கையோடு ஒன்றி, உணர்ந்து, தெளிந்து விழிப்புடன் வாழ்வதே ஆறாவது அறிவைப் பெற்ற மனிதனின் பிறவி நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு ஒப்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வே தெய்வ வழிபாடாக உருவாகியது.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "இயற்கைக்கும், அறிவிற்கும் உள்ள உறவு"