வாழ்க வளமுடன்

அன்பும் கருணையும், மகிழ்ச்சியும், நிறைவும் வேண்டுமானால், இறைநிலை உணர்வு எல்லோருக்கும் வரவேண்டும். சிறு குழந்தைகள் நிலையிலே இந்த உணர்வு வருவது எளிதன்று என்பதால் சிலை வணக்கம் போன்ற சில முறைகள் அவசியமே.

            ஆனால், பருவம் வந்தபின் புறவழிபாட்டிலிருந்து அகவழிபாடு தொடங்க வேண்டும். அதற்குப் பிறகு எல்லோருக்கும் அகத்தவம் எனும் கருதவசாதனை அவசியம் வேண்டும். அப்போது தான், மனம் ஒரு சம நிலையிலே இருக்கவும், உயர் நிலையிலே அறிவை இயக்கவும் முடியும்.

            இங்கே தான் மனம் அமைதி பெறும். எல்லையற்ற ஆற்றலுடைய பரம்பொருளே அறிவாக இருப்பதால் அது தனது முழுமையை நோக்கியே விரிவடைகிறது. அதனை எந்தப் பொருளிலும், எவ்வகையான புலன் இன்பத்திலும் எல்லை கட்டி நிறுத்திவிட முடியாது. போதும் என்ற நிறைவு நிலையைப் பெற முடியாது. பொருளில், இன்பத்தில் நிறுத்தினால் அவற்றில் நிலைக்காது விரைவு மீறும்.

            அதன் முழுமை எல்லை இன்னதென்று தெரியாத போது அதில் இணைப்புக் கிடைக்காத போது எந்தப் பொருளில், இன்பத்தில் அறிவைப் பொருத்தினாலும் அதுவே இன்னும் வேண்டும், மேலும் வேண்டும் என்று விட்டு விட்டு விரிந்து பேராசையாக அலைந்து கொண்டேயிருக்கும்.

            மேலும் பரநிலையுணர்வும், அதில் அடங்கி இணைந்து நிலை பெறும் பேறும் கிடைக்காத போது, அறிவு தான், தனது என்னும் தன் முனைப்பில் உணர்ச்சிவயமாகி, புலன்கள் மூலமே அளவு முறை கடந்து செயல்புரிந்து துன்பங்களையும், சிக்கல்களையும் பெருக்கிக் கொள்ளும். தனது மூலமும் முடிவுமாகவுள்ள இருப்பு நிலையை அறிவு உணர்ந்தால் தான் அதில் அடங்கி நிலைத்து, நிறைவும் அமைதியும் பெறும்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "மூலமும், முடிவும் ( The Origin and The End )"