வாழ்க வளமுடன்

ஆன்மப் பேரொளியை மறைத்திருக்கும் தன்முனைப்புத் திரை நீக்கப்பட்டு விட்டால், மனிதனே தெய்வம். ஆன்ம உணர்வைப் பெற்று விடுகிறான்; ஆன்மாவுக்கும் மூலப் பேராற்றலான தெய்வ உணர்வையும் பெற்று விடுகிறான்.

        பேரியக்க மண்டலத்தில் அவன் காணும் எல்லாத் தோற்றங்களும், நிகழ்ச்சிகளும், விளைவுகளும் தெய்வீக ஒழுங்கு அமைப்பின் திருவிளையாடலாகவே காண்கிறான். அவன் உணர்ச்சி வயப்படுவது இல்லை. பொறுமைக் கடலாகிறான். அவனிடம் பழிச்செயல்கள் எழுவது இல்லை. அறக்கடலாகத் திகழ்கிறான். அவன் அறிவிலே மயக்கமில்லை. மெய் விளக்கத்தால் மேன்மை பெற்ற பேரொளியாகத் திகழ்கிறான். அவன் வாழ்வில் ஒழுக்கம் இயல்பாக அமைகிறது. அவ்வொழுக்கத்தைப் பின்பற்றி எண்ணிறந்த மக்கள் தங்களைத் தூய்மை செய்து கொள்கின்றனர்; மேன்மை பெற்று வாழ்கின்றனர்.

        இந்தத் தன்முனைப்புத் திரையை அகற்றுவது எப்படி?  அது அவ்வளவு எளிதானதா?  அத்தகைய நற்பேறு தனக்கும் கிடைக்குமா?  இவ்வாறான ஐயங்கள் பலருக்கு எழுவது இயல்பு. மனிதன் தான் தனது தன்முனைப்புத் திரையை விலக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையானது அக்கறையும், முயற்சியுமே. சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எல்லோருக்கும் இது கைவரக்கூடியது.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "மனிதனே தெய்வம் (Man himself is God)"