வாழ்க வளமுடன்

இயற்கையின் ஒரு கூறு தான் மனிதன். ஆனாலும் பேரியக்க மண்டலத்தில் விளங்கும் எல்லாச் சிறப்புகளும் நுணுக்கமாக உள்ளடக்கம் பெற்ற திருவுருவமாக மனிதன் திகழ்கிறான். இயற்கையின் ஆதிநிலை யாகிய மெய்ப்பொருள் மனிதனிடத்தில் தான் தன் பெருமதிப்பை உணர்ந்து நிறைவு கொள்ளும் அறிவாற்றலாக அமைந்திருக்கிறது.

        இவ்வறிவு ஐம்புலன்கள் மூலம் பொருட்கள், மக்கள், இன்ப துன்ப உணர்வுகள் இவை வரையில் எல்லை கட்டி குறுகி நின்று இயங்கும் போது மாயையாகவும், உணர்ச்சிவயமாகவும் சிறுமையடைகிறது. அவ்வறிவு, தனது இயக்கத்திற்கு உலக மக்கள் சமுதாயத்தின் எண்ண அலைகளும், பேரியக்க மண்டலத்தில் இயங்கும் எல்லாத் தோற்றங்களின் ஆற்றலும் அடிப்படையாக அமைந்து தான் அறிவின் முழுமை பெற்று உய்ய உதவியாக உள்ளன என்ற விளக்கத்தில் மெய்ஞ்ஞானமாகி, விரிவும் விழிப்பும் பெற்று நிறைவு பெறுகிறது.

        எனவே, எல்லையற்ற அருட்பேராற்றலின் ஒரு பகுதியே ஒவ்வொரு மனிதனும் என்ற உண்மையினை உணர்ந்து அதனை மறவாமல் இருக்கவும், பழகிக் கொள்ளவும் வேண்டும். அகன்ற பேராற்றலை மறவாத விழிப்போடு உலக வாழ்வை நடத்தும் போதுதான், பற்றி நிற்பதிலும் பற்றின்மை என்ற தகைமை மனிதனுக்கு உண்டாகிறது.

        உலக வாழ்வில் பொருள், மக்கள், பால், புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமையுணர்வோடும், அளவு முறை அறிந்தும், விழிப்போடு இப்பற்றுக்களை வளர்த்தும், காத்தும் கொள்ள வேண்டியது பிறவிப் பயனை எய்த அவசியமானவை. நீரில் குளிப்பது தேவை தான். ஆனால் நீரில் மூழ்கிவிடாமலும் காத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு வாழ்க்கைக்கு பலவகையிலும் தேவைதான். ஆனால் நெருப்பு எரித்து விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "ஐவகைப் பற்று (Five types of attachments)"