எது வேண்டும் உனக்கு
by thirukumaran | Sunday, August 29, 2010 | In | NO COMMENTS
நண்பா!
ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன்,
ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன்.
ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன்,
ஆயிரம் முறை தப்பித்து ஓடினேன்.
ஆயிரம் முறை கருணையால் நனைந்தேன்,
ஆயிரம் முறை முகம் திருப்பி ஒதுங்கினேன்.
ஆயிரம் முறை என் இதயம் திறந்தது,
ஆயிரம் முறை கல்லாகி மூடிக்கொண்டேன்.
ஆனால்.......
ஆயிரம் முறை ஆணவம் பிறந்தபோது,
ஆயிரம் முறையும் அணைத்து தலைக்கனம் கொண்டேன்.
என் பிரிய நண்பா!
அதனால் விளைந்தது என்ன தெரியுமா
எல்லாம் தெரிந்தவனாய் கண்மூடிப் போனேன்,
எதுவும் முடியுமென்ற பித்துப் பிடித்தது,
கழுத்து வரை இழுத்துப் போட்டு சிக்கலில் சிக்கிக் கொண்டேன்,
காலை முதல் மாலை வரை கணக்குப் போட்டு வாழ வேண்டியதாயிற்று!
நல்லவேளை,
எங்கோ அடியில்......... இதயத்தின் ஆழத்தில்.......
பொங்கு பொங்கென்று உயிர்த்திருந்த உயிரின்குரலால்......
ஒரே தாவாய் திசை மாற்றிக்கொண்டேன்,
தலையிலிருந்து இதயத்தை நோக்கி பயணப்பட்டேன்.
ஆஹா!
எத்தனை நிறங்கள்!
எத்தனை விதங்கள்!
எத்தனை மணங்கள்!
எல்லையில்லா விளையாட்டு
காலமில்லா தொடர்நிகழ்வு!
இந்த இயற்கையின் கூத்தில்.......
எனக்கும் ஒரு பங்கு........
என்ற ஒரு ஆனந்தம்,
ரசிப்பு, அழகு, குதூகலம்,
ஏற்பு, படைப்பு, ஈடுபாடு,
இத்தனையும் கிடைத்தது!
ஆகவே நண்பா!
தலையின் ஆணவம் தருவது போராட்டம்,
இதயத்தின் வாழ்வில் பிறப்பது விளையாட்டு!
எது வேண்டும் உனக்கு?
No Responses to "எது வேண்டும் உனக்கு"
Post a Comment