வாழ்க வளமுடன்

1) கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக்
     
     கருத்துக்குக் கடவுள்தன்னைச் சிறுமை யாக்கிப்

புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப்

     போகும் வழியறியாது தவித்து வாழ்வில்

கண்கலங்கி நிற்போர்க்கும் கடவுள் தன்மை

     கர்மத்தின் விளைவாக எழுந்தியங்கும்

உண்மையினை விளக்குவதே இக்காலத்திற்கு

   ஒத்த உயிர்த் தொண்டாகும், உணர்வோம், செய்வோம்.

2) கடவுள்தான் அனைத்தையுமே படைத்தான் என்றேன்

     கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொன்னேன்

கடவுள் என்று கற்சிலையை அறையில் வைத்துக்

     கதவு அடைத்துப் பூட்டியும் வைத்தேன் பின் அந்தக்

கடவுளுக்குப் பசிதீர்க்கப் பால் நெய் தேங்காய்

       கனிவகைகள் கற்சிலைமுன் படைத்தேன் ஆனால்,

கடவுள்நிலை அறிந்தபோதென் செய்கை யெல்லாம்

       கண்டு விட்டேன் சிறுபிள்ளை விளையாறட்டாக.

3)  இறைநிலையே அறிவாக இருக்கும்போது

       இவ்வாறிவைச் சிலைவடிவத் தெல்லை கட்டி

குறைபோக்கப் பொருள், புகழ், செல்வாக்கு வேண்டி

        கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;

நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண

       நேர்வழியாம் அகத்துவத்தைக் குருவால் பெற்று

முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேட

        முனைந்திடுவாய் காலம் வீணாக்க வேண்டாம்

4)  கட-உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தான்,

        கருத்தறியான் ஊன்றி இதைக் காணவில்லை

கட-உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி,

          கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்

கட-உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டி

        கடவுள் என்றே சொல்லிச் சொல்லி வழக்கமாச்சு

கட-உள் என்று அறிஞன் ஓர் குறிப்புத்தந்தான்

       கடவுள் எங்கே? என்று பலர் தேடுகின்றார்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "சிலை வணக்கம்"