வாழ்க வளமுடன்

"எந்தச் சந்தர்ப்பத்திலும் சினம் நன்மை விளைவிக்காது என்றால் அடம் பிடிக்கும் குழந்தையையும், நல்லவர்களையும் ஏமாற்றும் கபட மனம் படைத்த வேலையாளையும் எப்படித் திருத்துவது?  கோபத்தைக் காட்டினால் தானே அவர்கள் ஒழுங்குக்கு வருகிறார்கள்?", என்ற கேள்விகள் எழலாம்.

        சினத்தைப் பயன்படுத்தாவிட்டால் நற்பயன் விளையவே விளையாது என்று காணும் இடத்தில் சினம் தேவைதான். ஆனால், இந்தச் சினமானது யார்மீது செலுத்தப்படுகிறதோ, அவர்களுக்கு மட்டும் தான் அது சினமாகத் தோன்ற வேண்டும். மற்றபடி அது நமக்குச் சினமாகவே இருக்கக் கூடாது.

        சினம் உதட்டில் இருக்கலாம், உள்ளத்தில் இருக்கக் கூடாது. சினம் வந்தது போல் வேண்டிய அளவு, நடிக்கலாம். ஆவேசத்தை வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால், அது போலியாக இருக்க வேண்டும். மனம் மட்டும் நீர்த்தளம் போல் சமமாகச் சலனமற்று இருக்கட்டும்.

        அது எப்படிச் சாத்தியம் என்றால் சினிமாவில் பார்க்கிறோமே, வில்லனுக்குக் கதாநாயகன் மேல் என்ன கோபம் வருகிறது?  அது உண்மையான கோபமா?  உண்மையானது என்றால், கதாநாயகன் அல்லவா இறந்து போவான்?  நம்மால் நடிக்க இயலாமல் இருக்கலாம். ஆனால், உண்மைச் சினத்தின் அபாயத்திலிருந்து தப்ப, நடிக்கக் கற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "நடிப்புச் சினம்"