வாழ்க வளமுடன்

எனது வாழ்க்கையில் 50 ஆண்டு காலம் நான் பொருள் துறையிலே கழித்தேன், பொருள் பெருக்கி அதனைச் செலவிட்டு அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா என்று முயன்று பார்த்தேன். முடியவில்லை. அடுத்து, நாம் ஏதேனும் அரசியலுக்கு உதவ முடியுமா என்று கட்டுரைகள் வாயிலாகவும், திட்டங்கள் வாயிலாகவும் உணர்த்தி வந்த போது ஏதோ ஒரு சிறிய அளவு பலன் தான் காண முடிந்ததே தவிர அது நிலைக்கவில்லை.

         இறுதியாக ஆன்மீகத் துறையில் வந்த பிறகு தான் ஒரு உயிருக்கு உணர்வு ஊட்டினால் கூட அதிலே நிறைவு இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு ஒரு இனிமையான வாழ்வு வாழ்வதற்கு அவர்களுக்கு ஊக்கம் அளித்தால், அதிலே ஒரு நிறைவு இருக்கிறது. இவ்வாறாகத் தனிமனிதன், குடும்பம், சமுதாயம், உலகம், என்ற முறையிலே தனி மனிதனிடத்திலே அமைதி வேண்டும்; சமுதாயத்திலே அமைதி வேண்டும்; உலகத்திலே அமைதி வேண்டும்.

         அந்த அளவிலே ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் உணர வேண்டும் என்றால், மனிதன் மனதை உணர வேண்டும்; மனதுக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய அறிவை உணர வேண்டும்; அறிவின் இருப்பிடமாக உள்ள உயிரை உணரவேண்டும். இதை உணர்வது ஒன்றும் சிரமமே இல்லை. உங்களுக்குள்ளாக, நீங்களாக இருந்து கொண்டு அதைத் திருப்பிச் சிந்தனை செய்து அதை அறிந்து கொள்ளும் போது இந்த மனம் இந்த முனையில் மனமாக இருக்கிறது. மற்றொரு முனையில் எல்லாம் வல்ல இறைவனாக இருக்கிறது என்பதைக் காணலாம். அது சுலபமே. அதற்கு ஒரு சிறு பயிற்சிதான் தேவை. அந்தப் பயிற்சியிலே ஆழ்ந்த சிந்தனை விளக்கம் தான் தேவை.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "உயிர் அறிவை உள்ளுணர்வாய்"