தன்னிலை விளக்கம்
by thirukumaran | Thursday, July 29, 2010 | In by மகரிஷியின் சிந்தனைகள் | NO COMMENTS
உடல், உயிர், மனம், மெய்ப்பொருள் என்ற நாலும் பொருள் நிலையில் ஒன்றே. விரிந்த மலர்ச்சியில் இயங்கும் நிலையில், உணரும் ஆற்றலில் பல பிரிவுகளாகி விட்டது. மெய்ப்பொருள், ஆகாசம் என்ற நிலையில் ஆற்றலாகி அதன் திணிவு நிலைகளின் வேறுபாடுகளால் பஞ்ச பூதங்களாகத் திகழ்கின்றது. உயிர்களிடத்து பஞ்ச பூதங்களைப் பிரித்துணர விளைந்துள்ள கருவிகளே பஞ்சேந்திரியங்கள்.
பஞ்சேந்திரியங்கள் மூலமாக எழுச்சி பெற்று ஐயுணர்வுகளாக விளங்குகின்ற விதமே பஞ்சதன் மாத்திரை. மெய்ப்பொருள் பஞ்சதன் மாத்திரைகளாக இயங்கும்போது பெறும் அனுபவமே, அடையும் தன்மையே மனம். மெய்ப்பொருள் தான் மனமாக இயங்குகின்றது. பர நிலைக்கும், மன நிலைக்கும் இடையே பஞ்ச பூதம், பஞ்சேந்திரியம், பஞ்சதன் மாத்திரை இந்நிலைகள் தொடரியக்கக் களமாக விளங்குகின்றன. இவ்வைந்து நிலைகளையும் இணைத்துத் தனது மூலம், சிறப்பு, முழுமை எனும் நிலைகளை உணர்வதே தன்நிலை விளக்கமாகும். இதனால் ஆணவமெனும் திரை விலகி அருட்பேறு அகக் காட்சியாகும். அமைதியும், நிறைவும் அறிவுக்கு உண்டாகும்.
இதன் விளைவாக இனி ஒழுங்குற்ற முறையில் நினைக்கவும், செயல்புரியவும் தனது திறம் ஓங்கும். பாவப்பதிவுகள் ஏற்படா. உள்ள பதிவுகள் கழியும். மயக்கத்தால் ஏற்பட்ட பொருள் பற்று விலகித் தன்னிறைவு உண்டாகும். இப்பெரும் பேற்றினைப் பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கம். ஒரு நல்வாய்ப்பு உங்களுக்கு இப்பேற்றினைப் பெறுவதற்குக் கிட்டி விட்டது. குண்டலினி யோகம் இவ்வனைத்து நலன்களையும் தரவல்லது. நீங்கள் அனுபவத்தாலும், ஆராய்ச்சியாலும் உணர்ந்து வருகின்றீர்கள். குண்டலினி யோகத்தின் மூலம் மனதை அதன் அடித்தளமாகிய உயிரிலும் அதன் தொடக்க நிலையாகிய மெய்ப்பொருளிலும் நிலைக்கச் செய்ய முடிகிறது. இந்த முறையான பயிற்சி நிச்சயம் முழுப்பயனளிக்கும்.
No Responses to "தன்னிலை விளக்கம்"
Post a Comment