வாழ்க வளமுடன்

             "Perspicacity" என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் "நுண்மான் நுழைபுலன்" என்பதாகும். நுண்ணிய என்றால் கூர்மையான, மாண் என்றால் மாண்புடைய, அதாவது விரிந்த சிந்தனையால் உயர்ந்த ஒரு பெருந்தன்மை, நுழைபுலன் என்பது ஊடுருவியறியும் திறன் (Penetrative knowledge) இதுதான் நுண்மாண் நுழைபுலன் என்பதற்கான முழு விளக்கம். வள்ளுவரும் ஒரு குறளிலே இதனைக் குறிப்பிடுகின்றார்.


                         "நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
                          மண்மாண் புனைபாறை யற்று"


                                என்ற ஆழ்ந்தோர் கருத்துடைய நுண்ணறிவு நிலை நுண்மாண் நுழை புலம்" தற்காலச் சூழ்நிலைகளையும், எதிர்கால விளைவுகளையும் ஒருகிணைத்து நோக்கி ஒவ்வொரு செயலையும் இப்படிச் செய்யலாம் என்று சரியாகவும், விரைவாகவும் தேர்ந்தெடுக்கக் கூடிய ஓர் அறிவு இருக்கிறதே அதைத்தான் "நுண்மாண் நுழைபுலன்" Perspicacity என்று சொல்வார்கள்.

அந்த நுண்மாண் நுழைபுலன் என்பதிலே விரிந்த அறிவு உண்டாகிவிடுகின்றது. மூன்று காலத்தையும் இணைக்கிறது அறிவு - பழைய அனுபவம், தற்காலச் சூழ்நிலை, எதிர்கால விளைவுகள் என்ற அளவிலே அதே நேரத்திலே இயற்கையின் விதியான செயல்-விளைவுத் தத்துவமும் கருத்தில் உள்ளது.

மனிதனுடைய தன்மை, அவனுடைய தேவை - இவற்றை இணைத்துச் செயல்படுகிறபோது, சரியான முறையிலே, சரியான வழியிலே, குறுகிய நேரத்திலே, சலனமில்லாமல், குழப்பமில்லாமல் தேர்ந்தெடுக்கக் கூடிய மனப்பக்குவத்தைத் தான் நுண்மாண் நுழைபுலன் (Perspicacity) என்று சொல்லுகிறோம்.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

1 Response to "நுண்மான் நுழை புலன்"

  1. gravatar ராஜ் Says:

    மிகவும் அருமை