வாழ்க வளமுடன்

இறை உறவு

by thirukumaran | Monday, June 28, 2010 | In by NO COMMENTS

                இறைவனை நோக்கித் தியானம் செய்தால், வேண்டினால், அவர் நமக்கு இன்னது இன்னது வேண்டும் என்று கேட்பதைக் கொடுப்பார் என்பதாக நாமே படித்தோ அல்லது பெரியவர்கள் சொல் மூலமாகக் கேட்டோ இறைவனை வழிபடுகிறோம். அங்கே உணர்வு தான்; மதிப்பு இல்லை என்று சொல்லவில்லை; அந்த மதிப்பு மாத்திரம் இருக்கிறது. ஏதோ கிடைக்க வேண்டும் என்ற ஆசை மிகுந்திருக்கிறது. உறவிலே அப்படி இல்லை; அங்கு முழுவதுமாகக் கலந்து நிற்கிறோம். எனக்கு அங்கே ஒன்று கிடைக்கும், இல்லை, நான் இங்கிருந்து ஒன்று கொடுப்பேன் என்பதையெல்லாம் மறந்து இரண்டும் ஒன்று கலந்த இடத்திலே ஏற்படுவது தான் உறவு. அந்த உறவை, அதாவது இறை-உறவை ஏற்படுத்திக் கொள்வது தான் ஜீவன் உய்வதற்கான வழி.

அடுத்து, இறை-உறைவை "ஏற்படுத்திக்" கொள்ள வேண்டுமா என ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும் பொழுது என்ன தெரியவருகிறது என்றால் அந்த உறவு தான் ஏற்கனவே இருக்கிறதே, ஏற்படுத்த வேண்டும் என்பதில்லையே! அதை அறிந்து, உணர்ந்து கொள்ளும் போது எப்படி நாம் அவனை நினைக்காமல் இருந்தாலும் கூட எனக்குள்ளாகவே அறிவாக, உயிராக, இல்லமாக, உள்ளமாக (இல்லம் என்றால் உடல், உள்ளம் என்றால் உயிர்) இருக்கக் கூடியவன் அவனே தான் என்ற ஒரு தெளிவு ஏற்பட்ட பிறகு அவன் வேறு, இவன் வேறு என்று நினைப்பதற்கில்லை.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "இறை உறவு"