இனி, சினம் இல்லை
by thirukumaran | Sunday, June 27, 2010 | In by வாழ்க்கை மலர்கள் | NO COMMENTS
ஒருவரிடம் ஒருவாரம் எடுத்துக் கொண்டு அவரிடம் மட்டும் சினம் தவிர்த்தல் பயிற்சியை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். "அவருக்கும் நமக்கும் என்ன உறவு? எத்தகைய உறவு? அவர் நமக்காக, நம் நலனுக்காக எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்?" என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பலமுறை, பல நாட்கள் நமது மகிழ்ச்சிக்காக அவர் ஆற்றிய தொண்டினை உற்று நோக்கினால் இத்தகைய அன்பு உருவத்தின் மீது, அன்பு கொண்ட நண்பர்மீது, உறவினர்மீது நான் சினம் கொள்வது தகாது; எனவே, இன்று முதற்கொண்டு அவர்மீது சினம் கொள்ளமாட்டேன் என்ற எண்ணம் உண்டாகும். இந்த எண்ணத்தோடு அவரது உருவத்தை மனத்தில் நினைத்து இம்முடிவை எடுத்துக் கொள்வோம். இன்று முதற்கொண்டு ஏழு நாட்கள் இந்தப் பயிற்சிக்கு ஒதுக்கிக் கொண்டு காலையிலே எழுந்தவுடன் "இன்று இவறோடு தொடர்பு கொண்டு பேசப் போகிறேன். இன்னின்ன வேளையில் செயலில் ஈடுபடப் போகிறேன், அவர் இன்னது சொன்னால் எனக்குச் சினம் எழுவது இயல்பாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், இன்று அவர் என்ன சொன்னாலும் சரி, சினம் எழாது காப்பேன், சினம் வருமேயானால், அந்த இடத்திலே விழிப்பு நிலை கொண்டு என்னைத் தடுத்துக் கொள்வோம், என்று உறுதி கொண்டு, அவர் என்ன சொல்வார் என்று தெரிந்து கொண்டு அதற்கும் நாமே அமைதியாகப் பதில் சொல்ல வேண்டும், அல்லது பதில் பேசாமல் இருக்க வேண்டும்" என ஒரு மானசீக நாடகமே தயார் செய்து கொள்ள வேண்டும். "மீண்டும் அந்த நாளிலே அவரோடு பல முறை சந்தித்துப் பேச, செயலாற்ற வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் விழிப்போடு இருந்து இவரோடு சினம் கொள்ளாது நாம் இந்த நாளைக் கழிக்க வேண்டும்" எனவும் பழகிக் கொள்ள வேண்டும்.
இடையிடையே அப்போதைக்கப்போது சங்கற்பமியற்றி மன வலிவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். தவங்களில் அவர்கள் உருவத்தை நன்றாக நிறுத்திக் கனிவோடு வாழ்த்த வேண்டும். சினத்திலிருந்து திருந்தவும் சங்கற்பம் செய்ய வேண்டும். இந்தச் சினமொழிப்புப் பயிற்சி நமது குடும்ப உறுப்பினர்களுக்கும் வெற்றியாக முடிய வேண்டும் என்றும் சங்கற்பம் செய்து கொள்ள வேண்டும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "இனி, சினம் இல்லை"
Post a Comment