வாழ்க வளமுடன்

சூரிய ஒளியினால் சூடு பெற்றுக் கடலிலிருந்து ஆவியாக மாறி மேகமாகி அது குளிர்ந்து எந்த இடத்தில் மழையாகப் பெய்தாலும் அந்த நீர், தனக்குப் பிறப்பிடமாகிய கடலை நாடியே ஓடுவது போல, இறை நிலையிலிருந்து புறப்பட்டுப் பல தலைமுறைகளாக ஜீவன்களில் இயங்கி, மனிதனிடம் இறுதியாக வந்து இயங்கிக் கொண்டிருக்கும் சிற்றறிவு, முற்றறிவான இறைவனை நாடியே அலைகின்றது. அத்த கைய வளர்ச்சி நிலையில் உடல் தேவைக்கான பொருள், புலன் இன்பம் இவற்றில் ஈடுபடுகிறது. இங்கு தான் அறிவானது தான் போக வேண்டிய இடத்தை மறந்து, அடுத்தடுத்து தொடர்பு கொண்ட பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றோடு தொடர்பும், மேலும் பொருள்களும் இன்பமும் எளிதாக மேலும் மேலும் உழைக்காமலே கிடைக்கக்கூடிய வழிகளாகிய அதிகாரம், புகழ் இவற்றின் மீது நிறைவு பெறாத அவாவையும் பெருக்கிக் கொள்ளுகிறது.

எவ்வளவு தான் பொருளோ, புலன் இன்பமோ, புகழோ, அதிகாரமோ அமைந்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் உயர்வாக வேண்டும் என்ற உணர்ச்சி வயமான மன அலையில் இயங்குகிறது. இதனால் அளவு மீறியும், முறை மாறியும், ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் பயன்படுத்த அவைகள் பழுதுபட்டு உடல் துன்பம், மன அமைதியின்மை, செயல் திறமிழத்தல், இதனால் சமுதாயத்தில் மதிப்பிழத்தல் ஆகிய குறைபாடுகளோடு வருந்திக் கொண்டே இருக்க வேண்டியதாகிறது. மெய்யுணர்வு பெற்ற குருவழியால் அறம் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும்போதுதான் தடம் மாறிய மன ஓட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும். துன்பத் தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும்; வேறு எந்த வழியும் மனிதன் உணர்வதற்கு இல்லை.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "விடுதலைக்கான வழி (The path to freedom)"