சமநிலை (Equanimity)
by thirukumaran | Sunday, August 17, 2008 | In by வாழ்க்கை மலர்கள் | NO COMMENTS
அறிவின் முழுமை பெற்ற ஞானியருக்கு இறைநிலையின் முழு வடிவமே பிரபஞ்சம். அதிலுள்ள எந்தப் பொருளையும் வெறுப்பு கொண்டு ஒதுக்கி விட முடியாது. பொதுவாக, துன்பம் தரும் ஒரு பொருளை, உடலுயிரை, செயலை வெறுப்பது, ஒதுக்குவது, பகைப்பது, அழிப்பது என்பது மனிதனுடைய இயல்பாகும். இது தன்முனைப்பால் உணர்ச்சி வயப்பட்டு வெளியாவதாகும்.
ஆனால், ஞானிகளோ இந்த எல்லை கட்டிய மனோ நிலையைக் கடந்தவர்கள். இப்பேரியக்க மண்டலத்திலுள்ள எந்தப் பொருளானாலும் அது பரிணாமத் தொடரிலே ஒரு தனித்த மதிப்புடையது. குறுகிய அறிவுடையோர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் தேவையே இல்லை என்றோ அல்லது ஏதோ ஒரு வகையில் துன்பமளிப்பதாகவோ தோன்றும்.
ஆயினும், அதுவே பிரபஞ்சப் பரிணாமம் என்ற இயக்க நியதியிலே வேறு பல நன்மைகளிலிருந்து பிரிக்க முடியாத, பல நன்மைகளுக்கு இயல்பூக்க வித்தாகவும் இருக்கும். சில நிகழ்ச்சிகள் மனிதன் அறியாமையால் ஆற்றிய செயல்களின் விளைவாக இருக்கும். அவை துன்பமளிப்பவையேயாயினும் அந்த வினைப்பதிவு அழியும் மட்டும் அது நிலைத்துத் தான் இருக்கும்.
இவற்றையெல்லாம் உணர்ந்து தெளிந்த அறிவிலே திட்டமிட்டு வாழ்பவர் ஞானி. அவருக்கு வெறுப்பு ஏது? மேலும் அவ்வாறு துன்பம் தந்தவரிடமும் வெறுப்புக் கொள்ளாத சால்பு நிலையைச் சார்ந்துள்ளவரே உண்மையில் ஞானியாவார். சிறந்த ஒரு குருவும் ஆவார். பிறருக்கு வழிகாட்டக் கூடிய தகுதியும் பெற்றவராவார். உணர்ச்சியிலே இந்தச் சமநிலை (Equanimity) அடைந்தவர் காட்டும் பாதையிலே நாம் சென்றோமானால் துன்பம் நம்மை அணுகாது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "சமநிலை (Equanimity)"
Post a Comment