வாழ்க வளமுடன்

தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை. நிகழ்ச்சிகளுடனோ அல்லது பொருள்களுடனோ எந்தத் தொடர்பும் இல்லாமல் மனதுடன் தொடர்பு கொண்டுள்ளது கவலை. மனம் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியாமல் போனால், பிரச்சினைகளை முடிக்க முடியவில்லை எனில், அந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் கவலையின் பிடியில் சிக்கிக் கொள்கின்றது. தேவைக்கும், இருப்புக்கும் இடையே இடைவெளி, எதிர்பார்ப்புக்கும் பெறுவதற்கும் இடையே இடைவெளி, தனக்கும் பிறர்க்கும் இடையே ஏற்படும் முரண்பாடு, ஆசைக்கும் திறமைக்கும் இடையே உள்ள வித்தியாசம். இவை யாவும் கவலைக்கு வித்தாகின்றன. மனதைக் கடமையில் செலுத்தி இடையறாத முயற்சியுடன், முறையான திட்டத்துடன் செயல்பட்டால் இவை அனைத்தையும் சரி செய்ய முடியும்.

ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கும் தோன்றும். அவை வந்து கொண்டும் போய்க் கொண்டும் தான் இருக்கும். பிரச்சினைகளைக் கண்டு பயந்துவிடக் கூடாது. வாழ்க்கையின் ஒரு பகுதி தான் பிரச்சினை. கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டன என்பதை எண்ணிப் பாருங்கள். அதே போன்று தற்பொழுது தோன்றியுள்ள பிரச்சினையும் காலத்தில் அவ்வாறே தீர்க்கப்பட்டு விடும்.

பிரச்சினையைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டுத் தைரியமாக அவற்றைத் தீர்ப்பதற்கு என்ன வழி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிரச்சனைக்குத் தீர்வு உடனே கிடைக்காவிட்டால் இயற்கைக்கு விட்டுவிடுங்கள். சிறிது காலம் பொறுத்திருங்கள். சரியான நேரத்தில் சரியான தீர்வு தானாகவே கிடைத்து விடும். இங்கு இயற்கைச் சட்டத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் தான் எந்த ஒரு பிரச்சினையும் பெரியதாகத் தோன்றும். அதற்குத் தீர்வு அதனுள் இருக்கிறது. அது தவறாமல் கிடைத்துவிடும். இதற்கென நாம் ஓர் வழிமுறையை ஏற்படுத்திக் கொண்டு சரியாக அதைக் கடைபிடித்து வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு பெற்று விடலாம். அதனால், மனதின் சுமையும் நீங்கிவிடும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "கவலை ஒழித்தல்"