வாழ்க வளமுடன்

இவ்வளவு சாப்பிட்டால் போதும், நன்கு ஜீரணமாகும். உடல் நன்றாக இருக்கும் என்று தெரிந்து அளவோடும், முறையோடும் சாப்பிடுவோம். ஆனால், சுவையாக இருக்கிறது என்று அதிகமாகச் சாப்பிட்டால் அதை ஜீரணிப்பதற்கு வேண்டிய அதிகப்படியான அமிலம் எங்கிருந்து சுரக்கும்? பற்றாக் குறையின் காரணமாக உணவு செரிக்காமல் தேங்கிப் போவதால் புளித்துப் போகிறது. அது வயிற்றில் புண்ணை உண்டாக்கித் துன்பம் தருகிறது. மனிதன் அறியாமையால் செய்யும் தவறுகள் தான் துன்பமாக விளைகிறது. இறையின் ஆற்றலால் எல்லாம் சரியாக நடக்கிறது.

ஆனால், நாம் ஆசையினால், மறதியினால், இறைவனின் செயலை மறந்ததினால் அதிகமாகச் சாப்பட்டோம். இறைவன் செயலில் குறுக்கிட்டோம். உறுப்புக் கெட்டுவிட்டது. அதன் விளைவாகத் துன்பத்தை அனுபவிக்கிறோம். இறையருள் எல்லாச் செயலிலும் கலந்து சரியான பலனைத் தந்து கொண்டே இருக்கிறது. நாம் அதைத் தடுத்தால் அந்தத் தடைக்குத் தகுந்தவாறு துன்பம் வரும். இதைத் தெரிந்து கொண்டால் இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டுமென்று முன்னோர்கள் சொன்னது தவறா? தவறாகச் செய்தால் துன்பந்தான் வரும். சரியாகச் செய்தால் இன்பமே நிலைக்கும். இந்த உண்மையைத் தெரிந்து கொள்கிறபோது இறையுணர்வு வருகிறது.

அதற்கு ஏற்றவாறு இந்த உடலுக்கு உணவு, ஓய்வு, உடலுறவு, எண்ணம், உழைப்பு இந்த ஐந்தையும் அலட்சியம் செய்யாமல், அதிகமாக அனுபவிக்காமல், முரணாக அனுபவிக்காமல் நாம் பார்த்துக் கொள்வோம். உடல் நலமாக இருக்கும். மனமும் அமைதியாக இருக்கும். அப்படி அறிவின் தெளிவோடு உடலை நலமாக வைத்துக் கொள்வதும் இறை வழிாபாடு தானே?

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

1 Response to "உடலோம்பல் இறைவழிபாடு"

  1. gravatar Anonymous Says:

    aahaa enna oru vazhkai artham kooriyerukkeergal neengal nandri ayya.