ஆன்மாவின் மூன்று நிலைகள்
by thirukumaran | Sunday, August 17, 2008 | In by வாழ்க்கை மலர்கள் | NO COMMENTS
காமதேனு : தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்ற சொல் ஆன்மாவைக் குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டிப் புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப் பெற்று ஆன்மா செயல்புரியும்போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும், துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படும். முதல் கட்டம் காமதேனு.
கற்பகம் : கற்பு+அகம் என்ற சொற்களின் இணைப்புத் தான் கற்பகம். இங்கு ஆன்மா உயிர் வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றும் தகுதி பெற்ற நிலை இச்சித்து. இச்சித்து, துய்த்துத் துய்த்துச் சலிப்பும் துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்துத் தன்னடக்கம் உண்டாகி உயிர்நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றும் தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன்தேவை, பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதிபெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும், ஒழுக்கமும் பெற்ற ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு+அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.
சிந்தாமணி : சிந்தை மணியான நிலை. அதாவது சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர்நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து உயிர் விரைவைச் சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய் முடிவாகத்தான் இயக்கமற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப் பொருளாகி விடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற்கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.
தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பும் அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலைதான் சிந்தாமணி. இதுதான் மனிதனின் முழுமைப்பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "ஆன்மாவின் மூன்று நிலைகள்"
Post a Comment