வாழ்க வளமுடன்

கடவுள் எனப் படுபவனே மனிதனானான்,
கருத்தியங்கி, கருத்துயர்ந்து, கருத்தறிந்தான்;
கடவுளாய் அனைத்துமே கண்டு விட்டான்
காண்பவனே ஆதியந்த மாகி நின்றான்
கடவுள் நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக்
கருத்துணர்ந்த நூல்கள் பல எழுதிவைத்தான்
கடவுள் ரகசியமதனை வெளியாய்க் காட்டும்
கடமையே சிறந்ததெனக் கொண்டான் ஞானி.

எந்தத் தத்துவத்தைக் கடவுள் என்று சொல்லுகிறோமோ, அதுவே அதன் பரிணாம உச்சத்தில் மனிதனாகவும் இருக்கிறது.

மனிதன் தன் அறிவை இயக்கி, அறிவை உயர்த்தி, அறிவையும் அறிந்து விட்டான். அவ்விளக்க நிலையில் தானே எல்லாமாய் இருக்கும் நிலையையும் கண்டுவிட்டான். காண்பவனே மூலமாகவும் முடிவாகவும் இருக்கும் ஏக நிலையைக் கண்டு கொண்டான்.

இந்த நிலையை அறிந்தவன் அறியாதவர்களுக்கு உணர்த்தும் சிறந்த நோக்கத்தோடும், பொதுவாக அறிவைப் பண்படுத்தும் பொருட்டும், ஆராயத் தூண்டும் பொருட்டும், பல நூல்களும் எழுதினான்.

மூலாதாரத் தத்துவத்தின் இரகசியத்தை அறியா நிலையில் - அறிய வேண்டிய நிலையில் - உள்ள யாவருக்கும் அறிய ஆவன செய்வதைத் தன்னிலை விளக்கம் பெற்ற ஞானிகள் தங்கள் கடமையாக் கொண்டார்கள். தம்மையறிந்தவுடன் ஞானிகளின் கடமை தீர்ந்து விடவில்லை.

அரூபமான பேராதார சக்தி நிலையில், ஞாபகத்துடன் பிரபஞ்சத்தை நோக்குகிறான். கோடானு கோடி உருவங்களில், தானே பல்வேறு திறத்தவனாய், வேறுபாடாய், உயிரியக்கம் அறிவியக்கமாய், அறிவியக்க நிலையிலும் பல தரப்பட்டதாய், அறிவு நிலையாய், அறிவு நிலையிலும் பல்வேறு துறைகளாய், அளவினதாய், இருப்பதை உணருகிறான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "மனிதன், அறிவின் உயர்வில் ஈசன்"