சமபங்கு
by thirukumaran | Sunday, August 17, 2008 | In by வாழ்க்கை மலர்கள் | NO COMMENTS
எப்பொழுது யாராவது ஒருவர் ஏதாவது ஓரிடத்தில் உண்மைப் பொருளைப் பற்றியும், இயற்கை இரகசியங்களைப் பற்றியும் கண்டுபிடித்துச் சொல்வாரானால், அப்போது அது மனித இனத்தினுடைய முழு உரிமை ஆகிவிடுகிறது. அன்றி அது கண்டுபிடித்தவருடைய தனிப்பட்ட உரிமையாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் இயற்கையின் பரிணாம வளர்ச்சி நியதிப்படி பிறந்து, பொருள் வளத்திலே உயர்ந்து, சமூகத்தால் கல்வி அறிவு ஊட்டப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வருவதால், எந்த ஒரு கண்டுபிடிப்பையும் பணத்திற்காக, அல்லது அரசியல் செல்வாக்கிற்காக வியாபாரம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.
இந்த இயற்கை நியதியை உணர்ந்து, இயற்கையைப் பற்றிய உண்மைகளை எல்லாம் நான் உள்ளுணர்வின் மூலம் உணர்ந்தவாறு விளக்கியிருக்கிறேன். மனித வள மேம்பாட்டுக்காக, காலத்திற்கேற்ற தேவையை உணர்ந்து, பேரறிவாகிய அந்த இயற்கை என்னும் பேராற்றலே யார் ஒருவர், தனது மன அலையை மிக நுண்ணிய அளவிலே ஒழுங்குபடுத்திக் கொள்கிறாரோ, அவர் மூலமாக உண்மைப் பொருளைப் பற்றிய எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது.
ஆகவே, தத்துவ உண்மைகள் மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இவை எவையானாலும் அவை இயற்கையெனும் பேராற்றலால் தகுதியான ஒரு நபர் மூலம் வெளிப்படுத்தப்பட்டவையேயாகும். தெரிந்து முயன்று கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒன்றுமே இல்லை. எனவே, அவை அனைத்திலும் உலகில் பிறந்து வாழும் ஒவ்வொருவருக்கும் சமபங்கு உண்டு என்பது விளங்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "சமபங்கு"
Post a Comment