இறைவனின் நிழல்
by thirukumaran | Sunday, July 11, 2010 | In by வாழ்க்கை மலர்கள் | NO COMMENTS
மனத்தின் இயக்க நிலைகளை இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம். ஜீவகாந்தமானது உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களின் விரைவான சுழற்சியினால் எழும் அலைகளே. ஒரு உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களிலிருந்து இவ்வாறு வெளியாகும் அலைகள் அனைத்தும் உடலில் சுழன்று கொண்டே இருக்கின்றன.
பொதுவாக, எந்த ஆற்றல் சுழற்சி பெற்றாலும் திண்மை உடைய பகுதி மத்தியில் போய்ச் சேர்வதும், லேசான பகுதி புறத்தே நிற்பதும் துல்லியச் சமதளச் சீர்மை (Specific Gravity) தத்துவம் ஆகும். இந்த இயல்பின்படி, ஜீவகாந்தத்தின் பெரும்பகுதி தனது சுழலியக்கத்தினால் உடலின் மையப் பகுதிக்கு வந்து சேருகிறது. அங்கு இறுகி, குறுகி அழுத்தம் பெற்று ஜீவகாந்த நிலைக்களமாக அமைகிறது. இதனைக் கருமையம் என்றும், ஆன்மா என்றும் வழங்குகிறோம்.
மனிதன் எந்தச் செயல் செய்தாலும் உடலில் ஓடிக் கொண்டிருக்கும், ஏற்படும் தாக்கங்கள் அனைத்தும் கருமையத்தில் போய்ச் சேருகின்றன. இந்த நிகழ்ச்சியை வினைப்பதிவு என்று கூறுகிறோம். பதிவு என்றால் இங்கு எழுதி விளக்கக் கூடியதோ, அல்லது புலன்களுக்கு எட்டும்படியாக அடையாளம் கொடுக்கக் கூடியதோ அன்று.
கருமையத்தில் இறுகிக் குறுகி, நிலை பெற்றிருக்கும் ஜீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செயல் அல்லது அனுபோக அனுபவங்களுக்கும் ஏற்ப, தரமாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி மாற்றம் பெற்ற தன்மைகள் அதே மன அலைச் சுழல் மறுபடியும் வரும்போது, மூளையின் காந்த அலைகளால் விரித்துக் காட்டப்படுகிறது. அப்பொழுது உண்டாகும் அகக்காட்சியே எண்ணங்கள்.
இறைநிலைக்கும் மன நிலைக்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும் என்றால், அவற்றை உருவத்துக்கும், அதிலிருந்து தோன்றும் நிழலுக்கும் ஒப்பிடலாம். உருவத்தை விட்டு நிழல் பிரிவதே இல்லை. ஆனால், நிழலை எடுத்துக்காட்டவல்ல ஒளியானது உருவத்தின் மீது படும் கோணத்திற்கு ஏற்ப, நிழலானது அளவில் மாறுபடும். அது போன்று மனிதமனம் இறைநிலையை விடுத்து இயங்குவதே இல்லை.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "இறைவனின் நிழல்"
Post a Comment