வாழ்க வளமுடன்

எனது முதல் ஆசான்


இந்த வயதில்தான் எனக்கு ஒரு குரு கிடைத்தார். எனது வயதுக்கு ஏற்ப அவர் பக்தி மார்க்கத்திலேயே எனது நினைவை ஆழ்த்தி வைத்தார். சில சமயம் சுத்த அத்வைத தத்துவம் பேசினாலும், எனக்கு அது புரியவில்லை. அவருக்கு அப்போது வயது எழுபத்தைந்து. அவர் பெயர் ஏ. பாலகிருஷ்ணன். அவருடைய நற்போதனைகள் என் சிந்தையைத் தூண்டிவிட்டன. அவர் சொற்படி ஒழுக்கத்தோடும், அடக்கத்தோடும் நடந்து வந்தேன். பஜனை செய்வதில் மிகவும் ஆர்வம் பெற்றேன். எனினும் அவர் விளக்கும் கருத்துக்களின் அடிப்படை உண்மை அறிய, எப்போதும் சிந்தித்துக் கொண்டேயிருப்பேன். எனக்குப் பன்னிரெண்டு வயதிற்குள் எனது உள்ளம் சில குறிப்பிடத்தக்க வினாக்களை எப்போதும் எழுப்பிக்கொண்டேயிருக்கத் தொடங்கியது. அவை


1. இன்ப துன்பம் எனும் உணர்ச்சிகள் யாவை? இவற்றின் மூலமும் முடிவும் என்ன?


2. நான் யார்? உயிர் என்பது என்ன? உயிர் உடலில் எவ்வாறு இயங்குகின்றது? நோயும் முதுமையும் ஏன் உண்டாகின்றன? எப்படி உண்டாகின்றன?


3. கடவுள் யார்? பிரபஞ்சத்தை ஏன் அவர் படைத்தார்?


4. ஏழ்மை ஏன்? எப்படி உண்டாயிற்று? அதைப் போக்குவது எப்படி?


இவ்வினாக்கள் தான் என் சிந்தனையை ஆட்கொண்டன. அப்போது கிடைத்த குரு, எனக்குப் பஜனைப் பாடல்கள், சதகங்கள் இவற்றைத்தான் போதித்தார். ஆயினும் எனது வினாக்களில் ஒன்றுக்குக்கூட அவரால் விடை கூற முடியவில்லை. எனினும் எனக்கு இவ்வினாக்களை ஒட்டிய விளக்கங்கள் சில கிடைத்தன. அவை:


1. கடவுளை வழிபட்டு நமது குறைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கடவுளே காட்சியாகி, நமக்கு அவர் நிலையை விளக்குவார்.


2. நல்ல வருவாயுள்ள தொழிலாகத் தேர்ந்து எடுத்து அதைச் செய்ய வேண்டும். அதன் மூலம் வறுமை போகும். தறி நெசவின் மூலம் வறுமை மிகுமே அன்றி, அது போகாது.


3. ஒரு ஞானகுருவை அடையவேண்டும். அவர் மூலம் உயிரைப் பற்றிய விளக்கம், அறிவைப் பற்றிய விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும். இவையே என் உள்ளொளி காட்டிய விளக்கம்.
இந்த முடிவின்படி செயல்புரியத் தொடங்கினேன். வயது பதினான்கு ஆகிவிட்டது.




முதலில் வறுமையிலிருந்து விடுபடவேண்டும். அதில் வெற்றி பெற நெசவுத் தொழிலை விட்டு, வேறு உத்யோகம் பார்க்க வேண்டும். அதற்கு ஆங்கிலம் படிக்க வேண்டும். இந்த முடிவில் கூடுவாஞ்சேரிப் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரை அணுகி, எனக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும்படி வேண்டினேன். அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் மாதம் எட்டணா சம்பளம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார். அதுபோலப் பணம் கொடுத்துச் சிலர் “பிரைவேட்” படித்துக் கொண்டிருந்தார்கள். எட்டணா மாதா மாதம் யார் கொடுப்பார்கள்? அதற்கு ஒரு வழி கண்டேன். தந்தைக்குச் செலவுப் பளு ஏற்படக் கூடாது எனவும் நினைத்தேன். எனக்கு அப்போது நாள் ஒன்றுக்குத் தோசை வாங்கிச் சாப்பிடக் காலனா கொடுப்பார்கள். அதை மீதப்படுத்தினால் முப்பது நாளைக்கு 71/2 அணா கிடைக்கும். தந்தையைக் கேட்டு அரையணா வாங்கிக் கொள்ளலாம். சேர்த்து எளிதாக ஆசிரியர் சம்பளம் கொடுத்து விடலாம். இவையே என் முடிவு. என் அன்னை தந்தையார் ஒப்புதலுக்கு முனைந்தேன். வேறு பிள்ளைகளோடு சேர்ந்து கெட்டு விடுவானோ மகன் என்ற நினைவில், அவ்வளவு எளிதில் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. பத்துத் தினங்களுக்குமேல் கழிந்துவிட்டன. என்னிடம் மூன்று அணா இருப்பு சேர்ந்துவிட்டது. காலையில் தோசையோடு தயிர் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்.
அந்த நாளில் இரண்டு தம்பிடி கொடுத்தால் ஒரு பெரிய தோசை கிடைக்கும். அது என் போன்றவர்களுக்குக் காலையில் சாப்பிடப் போதும், குழந்தைகளுக்கு ஒரு தம்பிடி தோசையே போதும். அத்துடன் கெட்டித் தயிர் ஒரு கொட்டாங்கச்சி நிறைய ஒரு தம்பிடிக்குக் கிடைக்கும். தோசையும் தயிரும் சேர்த்து உண்பது எனக்கு மிகவும் விருப்பமானது. ஆங்கிலம் கற்றுக்கொண்டு உத்தியோகம் பார்க்க வேண்டும் என்னும் விழைவில், காலையில் தயிரும் தோசையும் விலக்க வேண்டியவையாகிவிட்டன. காலை 7 மணிக்கெல்லாம் காலை உணவாகிய கேழ்வரகுக் கூழைச் சாப்பிட்டு விடுவேன். படிப்பிற்குச் சம்பளம் சேர்க்க அன்றே தொடங்கி விட்டேன். மூன்றணா சேர்ந்தபின் மீண்டும் எனது அன்னையைக் கெஞ்சினேன். அவர்களுக்கு நான் படிப்பது விருப்பம்தான். ஆயினும் ஒரு சிறு குழப்பம் அவர்களுக்கு _ கிறித்தவர்கள் இல்லம் சென்று இரவில் படித்தால், ஒரு வேளை அவர்களிடமிருந்து தண்ணீர் வாங்கிச் சாப்பிட்டு விடுவேனோ என்று சந்தேகப்பட்டார்கள். அந்த நாளில் அவ்வளவு வேறிபாடு கிறித்தவர்களுக்கும், இந்துக்களுக்குமிடையே இருந்தது. அப்படி ஏதும் தவறு செய்ய மாட்டேன் என்று உறிதி கூறினேன். பிறகு எனக்கு இரவில் படிக்க அனுமதி கிடைத்தது. அதனால் என் வேலையின் அளவு குறையாதபடி பார்க்க காலை நேரத்தில் சுமார் 5 மணக்கெல்லாம் தறியில் இறங்கி, விளக்கு வைத்து நெசவு நெய்யத் தொடங்கினேன். வேலையின் அளவைச் சரிக்கட்டிக் கொண்டேன்.
என் தந்தையார் கையினாலேயே நாடா ஓட்டும் தறி நெய்தார். நான் கயிறு இழுத்து நாடா ஓட்டும் முறையைக் கற்றுக் கொண்டேன். அவர் நெசவின் அளவைப் போல் மூன்று மடங்கு நான் நெய்து விடுவேன். நான் அதிகமாக உழைப்பதைப் பற்றி எண்ணி எண்ணி வருந்துவார்கள் என் பெற்றோர். ஆயினும் ஒரு புறம் வறுமை. அவ்வறுமைக்கு என் உழைப்பே ஈடுகட்டி வந்தது. ஓரளவு நாங்கள் போதிய உணவுகொள்ள முடிந்தது. எப்போதும் பிறர் உதவியை எவ்விதத்திலும் நாடாமல் கண்ணியமாக வாழவேண்டும் என்ற கருத்து உடையவர்கள் என் பெற்றோர்; அவ்விதமே அவர்கள் வாழ்ந்து வந்தனர்.




வறுமையைப் போக்க வேண்டுமென்ற திட்டத்தின்படி ஆங்கிலம் படிக்கத் தொடங்கி விட்டேன். கடவுளைக் காண வேண்டுமே? அதற்கு இறை வழி பாட்டில் ஆழ்ந்த நிலையை செலுத்தினேன். பிள்ளையார் வணக்கம் எளிதில் எல்லா வெற்றிகளையும் அளிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன். எங்கள் வீட்டில் பிள்ளையார் இல்லை. காரணம் அதை வைக்க தனி இடம் இல்லை. மேலும் ஒரு பிள்ளையார், மணையோடு வாங்க அக்காலத்தில் ரூபாய் இரண்டரை வேண்டியிருந்தது. அதற்கு ஒரு முடிவெடுத்தேன். கோயில் பிள்ளையாருக்கே பூசை செய்வது என்று முடிவு கட்டினேன். கூடுவாஞ்சேரி கிராமத்தில் பிள்ளையார் கோயில் சிறியது. அதன் சாவியைக் கேட்டு வாங்கிக் கொண்டேன். காலை 4.30 மணியிலிருந்து 5.00 மணிக்குள் பிள்ளையார் சிலைக்குத் தண்ணீர் ஊற்றித் தேய்த்து கழுவுவேன். அதற்கெனத் துணி இரண்டு துண்டுகள் இருந்தன. தினம் ஒன்றை அவிழ்த்துத் தோய்த்துக் காய வைப்பேன். காய்ந்த துண்டை உடுத்துவேன்.
ஒருநாள் தண்ணீர் ஊற்றும்போது பிள்ளையார் சிலையைப் பார்த்தேன். அதில் செதில் செதிலாக அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்தது. அது பிள்ளையாருக்கு வலிக்கும்போல் தோன்றியது. கதவைச் சாத்திவிட்டு ஒரு கொட்டாங்கச்சி ஓடு கொண்டு பருக் பருக்கென்று சுரண்டிக் கொண்டிருந்தேன். இதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒருவர், கதவைத் தட்டித் திறக்கச் செய்தார். “நீ என்ன செய்கிறாய்” எனக் கேட்டார். நான் உண்மையைச் சொன்னேன். அவர் என் மேல் சீறி விழுந்தார். “கொட்டாங்கச்சி எடுத்து பிள்ளையாரை சுரண்டுகிறாயே, அறிவு கெட்டவனே” என்று கத்தினார். எனக்கு அவர் கோபித்ததில் ஒன்றும் வருத்தமில்லை. பிள்ளையாருக்கு அபசாரம் செய்து விட்டானே என்று, எனது பிஞ்சு உள்ளம் மிகவும் வருந்தியது.
மார்கழி மாதம் 4 மணிக்குப் பிள்ளையார் பூசை செய்தேன். குளத்து நீரில் நான் குளிக்கும்போது குளிர் என்னால் தாங்க முடியவில்லை. இதுபோலத்தான் பிள்ளையாருக்கும் குளிரும் என்று பரிதாபப் பட்டேன். அன்று வந்து என் தந்தையிடம் வினவினேன். “அப்பா! பிள்ளையாருக்கு மார்கழி மாதத்தில் வெந்நீரில் முழுக்காட்டினால் என்ன? என்றேன். புன்சிரிப்போடு என்னைப் பார்த்தார். “அப்படி செய்யக்கூடாதப்பா! நீ நினைப்பது போலப் பிள்ளையாருக்குக் குளிராது” என்று எனக்குச் சமாதானம் கூறினார். சிந்தனையோடு பல வினாக்களை எழுப்பும் எனக்குக் கற்சிலைக்குக் குளிர் ஏது? என்று தெரியவில்லை.




கிராமங்களில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் கோயில் உள்ள ஊர்களுக்குச் சென்று இரண்டு மூன்று தினங்கள் அங்கேயே உல்லாசமாகச் சமைத்து உண்டு, உற்சவம் பார்த்து விட்டுத் திரும்புவார்கள். என் பெற்றோரும் ஆண்டு தோறும் திருப்போருர், மகாபலிபுரம் ஆகிய இரண்டு ஊர்களுக்கும் போவார்கள். அதுபோல அவ்வாண்டும் என்னையும், என் தம்பியையும், அழைத்துக் கொண்டு, திருப்போரூர் சென்றார்கள். அங்கு இரண்டு நாட்கள் இருந்து, பிறகு மகாபலிபுரம் சென்றார்கள். எங்கள் குடும்பத்தில் மாமிச உணவு கொள்ளும் பழக்கம் இருந்தது. எனக்குச் சிறுவயது முதல் அவ்வளவு பிடிப்பதில்லை. ஆயினும் அடியோடு நிறுத்திவிடவில்லை. மகாபலிபுரத்தில் ஒரு திருவிழா, புத்தகக் கடை இருந்தது. அதில் ஒருசிறு புத்தகம் குறிப்பாக என் கண்ணில் பட்டது. அது “புலால் உணவின் கேடுகள்” என்ற தலைப்போடு இருந்தது. அதை ஒன்றே காலணா கொடுத்து வாங்கினேன். உடனே அதைப் படிக்கத் தொடங்கினேன். அதில் என் உள்ளத்தை நெகிழ வைக்கும் சில கவிகள் இருந்தன. அவற்றில் ஒன்று,


அம்மா வெனவலற ஆருயிரைக் கொன்றருந்திஇம்மானிட ரெல்லாம் இன்புற் றிருக்கின்றார்அம்மாவெனும் ஓசை கேட்டகன்ற மாதவர்க்கும்பொய்ம்மா நரகமெனில் புசித்தவர்க்கென் சொல்லுவதே!என்ற கவி.


மாபெருந் தவசியாயினும், ஒரு ஆடு அல்லது மாடு தன்னைப் பிறர் கொல்லும்போது வெளியிடும் “அம்மா”வெனும் ஓசையைக் கேட்டு விட்டால் அதை அக்கொடுந் துன்பத்திலிருந்து விடுவிக்காமல், அவ்விடத்தை விட்டு அகன்று போனால் அவருக்குப் பொய்ம்மா நரகம் கிட்டும். அவ்வாறாயின் அக்கொலைச் செயல் மூலம் கிடைத்த புலாலை உண்டவர்கள் எத்தகைய பாவத்துக்கு உள்ளாவார்கள்? என்பதே இதன் கருத்து. இதைப் படித்தேன். எனது சிந்தனை விரைவாக ஓடியது. தெய்வ நினைவு எழுந்தது. நான் அதுவரையில் தெரியாமல் மாமிச உணவு உண்டு ஏற்றுக்கொண்ட பாவங்களை மன்னிக்கும்படி வேண்டினேன். கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அன்று முதல் புலால் உண்ணா நோன்பை ஏற்றேன். என் அன்னையாரும், தந்தையாரும் எனது மனமாற்றத்திற்கு உளம் நிறைந்த ஆதரவு தந்தனர். பிறகு என் வாழ்நாளில் பரஞ்சோதி என்பவரோடு தொடர்பு கொண்ட காலத்தில் சில சமயம் உணவில் குழப்பங்கள் ஏற்பட்டன. எனினும் நான் மீண்டும் திருந்திக் கொண்டு உறுதியோடு புலால் தவிர்த்த உணவில் நிலைத்து விட்டேன்.


பதினாறு வயது தொடங்கி நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் காண முனைந்தேன். பண்டிகை நாட்களில் படையல் போடுவது எதற்காக? இந்தக் கேள்விக்கு என் பெற்றோரால் சரியானபடி விடையளிக்க முடியவில்லை. கடவுள்தான் நமக்கு வாழ்வளிக்கிறார். அதனால் அவருக்கு நாம் உணவு படைக்கிறோம் என்பார்கள். எனக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. உடல் உள்ளவர்களுக்குத்தான் பசி உண்டு, உணவு தேவை. கடவுளுக்கு உடலில்லை. அவர் அரூபம். ஆகவே அவருக்கு உணவு தேவையில்லை. ஆயினும் கடவுளை நினைந்து நாம் உணவு கொள்ள வேண்டும். இதுவே படையலுக்கு அருத்தமாக இருக்கும் என்று எனது விளக்கத்தை என் பெற்றோருக்குச் சொன்னேன். அவர்கள் உள்ளப் பூரிப்பெய்தினர். நீ சொல்வதுதான் சரியப்பா என்று ஒத்துக் கொண்டார்கள். எனக்கு அது ஒரு பெரிய வெற்றியாகவே இருந்தது. ஊரில் சனிக்கிழமைகளில் பலர் கூடிப் பஜனை பாடிக் கொண்டு தெருக்களை சுற்றுவது வழக்கம். அடிக்கடி தாயுமானவர் பாடல்களில் ஒன்றான “அங்கிங்கெனாதபடி” எனத் தொடங்கும் பாடலை விருத்தமாகப் பாடுவார்கள். அந்தப் பாட்டில் எனது உள்ளம் முழுவதும் லயித்து விடும். அதன் மூலம் உணர்ந்த முடிவே, கடவுள் அரூபம் எனும் தெளிவு. இந்தப் பாடலே எனது உள்ளுணர்வைத் தூண்டி, தத்துவத்திலே தெளிவை அளித்து, இறைநிலையை யான் உணர உதவியது. தைமாதம் பொங்கல் தினம்! அன்று ஒரு அடை சுட்டுச் சூரியனுக்குப் படைத்தனர். அதில் உப்பில்லை. இது ஏன் என்று என் அன்னையைக் கேட்டேன். சூரிய பகவானுக்குச் செய்யும் இந்த அடையில் உப்புப் போடக்கூடாது. போட்டால் தவறு என்று கூறினார்கள். அவர்கள் கருத்துத் தவறு என்று எடுத்துக் காட்டினேன். நமது குடும்பத்தில் எப்போதோ ஒரு மாமியார் மறதியாக உப்புப் போடாமல் அடை சுட்டுவிட்டிருப்பாள். படையல் ஆனபின், அடையில் உப்பில்லையே என்று மருமகள் கேட்டிருப்பாள். சூரியனுக்குப் படைக்கும் அடையில் உப்புப் போடக்கூடாது என்று கூறி, தன் தவற்றை மாமியார் மறைத்திருப்பாள். பிற்காலத்தில் மருமகளும் அவ்வாறே உப்புப் போடாமல் அடை செய்திருக்கலாம். இவ்வாறுதான் தலைமுறை தலைமுறையாக இந்த வழக்கம் பின்பற்றப்பட்டிருக்கும் என்று கூறினேன். என் அன்னையும் தந்தையும் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்த காட்சியை, நான் எவ்வாறு விளக்குவேன். அதன் பிறகு நடந்த பொங்கல் விழாக்களில் உப்பிட்டே அடை சுட்டுப் படைத்தனர்.


எனது பதினெட்டு வயது வரையில், நான் இரவுப் பள்ளி சென்று ஆங்கிலம், தமிழ், கணக்கு இவற்றைக் கற்றுக் கொண்டேன். ஆசிரியர்கள் ஆண்டுதோறும் மாறினார்கள். மாதச் சம்பளம் ரூ.11/2 வரையில் உயர்ந்தது. அப்போது படிப்பு நான்காவது பாரத்திற்குச் (IV Form) சமம் என்று எனது ஆசிரியர் கூறினார். இந்த நிலைமையில்தான் நான் நெசவுத் தொழிலை விட்டு வேறு ஏதேனும் வேலை தேடிப் பெற வேண்டும் என விழைந்தேன். இந்த விருப்பத்தை என் அக்காளிடம் தெரிவித்தேன். கற்பகம் எனும் பெயருடைய மூத்த அக்காளும், அவர் கணவர் சித்த மருத்துவர் ஷண்முக முதலியாரும், மயிலாப்பூரில் இருந்தார்கள். அவர்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களுக்குத் தெரிந்தவர்களிடம் எனக்கு ஏதேனும் வேலை தேடித் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.


இந்த நிகழ்ச்சிகள் பற்றி நான் எழுதி உள்ள கவிகள் வருமாறு:


“எந்த ஒரு மனிதனுமிவ் வுலகமீதுஇன்ப துன்ப அனுபவத்தின் இயல்பென் னென்றுசிந்திக்கும் ஆற்றல் அவர்க்குயரும் போதுசிவன் சீவன் இருநிலைகள் இருப்பியக்கம்இந்த உலகில் மக்களிடையே காணும்ஏழ்மை நோய்மரண இயல்பு அறியவென்றேஉந்தப்படுவர்; எனக்கும் ஏழ்மை, தெய்வம்,உயிர்பற்றி அறிய அவா உண்டாயிற்று.”


“இம்மூன்று கேள்விகளை எழுப்பிக்கொண்டுஇரவு பகலாய்ச் சிந்தித்து அறிந்திடாமல்நிம்மதியை இழந்தறிஞர் மன்றம் நோக்கிநீங்கள் சொல்லுங்கள் எனக் கேட்ட புத்தர்செம்மையுள நேர்பதிலைப் பெறாததாலேசிறந்த அரசப் பதவி உதறித்தள்ளிஎம்முறையில் துன்புற்றார்? எனக்கு மட்டும்எவ்விதத்தில் பதில் விளங்கும் எளிதில் அந்நாள்.”


“ஓலைக்குடிசை வாழ்க்கை, உணவோ, சொற்பம்,உள்ளத்தில் முன்னேற வென்ற வேகம்,ஆலை, வாணிபம் அரசியல் தொழில் செய்தற்குஆசையினால் ஆங்கிலம் படிக்கலானேன்;வேலை செய்தேன் பகல் நேரம்; இரவில் சென்றுவிரும்பித்தமிழ் ஆங்கிலம் பயின்று வந்தேன்;காலையிலே எனக்கென்று பெற்றோர் தந்தகாலனா, ஆசான் சம்பள மாயிற்று.”


“படிக்க எழுதத் தமிழோ டாங்கிலத் தைப்பதினெட்டு வயதிற்குள் கற்றுக் கொண்டேன்;பிடிக்கவில்லை தொடர்ந்து செய்ய நெசவுவேலை;போய்விட்டேன் சென்னைக்கு வேலைதேடிநொடித்தமனம் ஊக்கமுற எனக்கோர் வேலைநுங்கம்பாக்கத்தில் அஞ்சல் அகத்தில்கிட்ட,வடித்த கண்ணீ ரதனைத் துடைத்து, என்றன்வாழ்வில் முன்னேறக் கடும் உழப்பை ஏற்றேன்.”



No Responses to "எனது வாழ்க்கை வரலாறு - வேதாத்திரி (2)"