வாழ்க வளமுடன்

உவமையினால் உண்மைப் பொருளை உணர முடியுமா என்றால் உணர முடியாது. உவமையினால் பொருளின் அருகில் போகலாம்; ஆனால் அதை உணர முடியாது. அதனால் தான் வேதாந்தங்களையெல்லாம் உபநிஷத்துக்களாக மாற்றியபோது "உபநிஷத்து" என்ற பெயர் வந்தது. "உபநிஷத்து" என்றால் "மிக அருகில்கொண்டு போய் வைப்பது" என்பது தான். சேர்த்து விடுவதே தவிர அதுவே உணர்த்திவிட முடியாது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் "இனிப்பு"என்பது எப்படி இருக்கிறது என்ற கேள்வியை போட்டுக் கொள்வோம். "இனிப்பு" என்றால் சர்க்கரைபோல் இருக்கும். சர்க்கரை எப்படி இருக்கிறது? கொய்யாப்பழம் மாதிரி இருக்கிறது. இரண்டுக்கும் இனிப்பு என்று சொல்கிறீர்களே என்றால் மொழியில் அவ்வளவுதான் சொல்ல முடியும். இதற்குமேல் இனிப்பு என்பதை எப்படியாகிலும் எடுத்துக்காட்ட முடியுமா? முடியவே முடியாது.

மாம்பழம் எப்படி இருக்கிறது? இனிப்பாக இருக்கும். வாழைப்பழம் எப்படிஇருக்கிறது? இனிப்பாக இருக்கும். நூறு பழம் எடுத்தால் நூறு இனிப்பு என்று சொல்லிவிட முடியுமா? இனிப்பு என்ற இடத்தில் ஒன்றாகத் தான் தெரியும். வாழைப்பழ இனிப்புக்கும் மாம்பழ இனிப்புக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிச் சொல்ல இயலுமா? என்றால் இயலாது. அதையெல்லாம் அவரவர்கள் அனுபவித்து உணர்ந்த பிறகு தான் வாழைப்பழத்தைப் போல இருக்கும் என்று சொன்னால் அதை ஒத்துக் கொள்ள இயலும். ஆனால், அந்த இறைநிலையானது ஒன்றே ஒன்று தானே இருக்கிறது? அந்த ஒன்றே ஒன்றுக்கு எதனை உவமை காட்டுவது? உவமை காட்ட முடியாது. ஆகையினால் இவனே அதுவாகி அந்த நிலை அடைந்த அனுபவத்தில் வாங்கிக் கொள்ள வேண்டியது தான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "உவமையின் எல்லை"